நிர்வாக அறிவியல் பல்கலைக்கழகமான எம்எஸ்யு தனது மாணவர் ஆற்றல் மேம்பாட்டுத்துறை (எஸ்சிடி) மூலமாக சொங்கெட் நெசவுக் கலையை மேம்படுத்தும் ஒரு திட்டத்தை தொடரச் செய்திருக்கிறது. அனைத்துலக சொங்கெட் ரன் 5.0 எனும் 5ஆவது தொடர் நிகழ்ச்சியை இதற்காக அது ஏற்பாடும் செய்திருந்தது. மேன்மை தங்கிய தெங்கு பெர்மாய்சூரி சிலாங்கூர் தெங்கு பெர்மாய்சூரி ஹஜ்ஜா நோரஸிக்கின் இதனை அதிகாரப்பபூர்வமாகத் தொடக்கி வைத்தார். அனைத்துலக சொங்கெட் ரன் 5.0 நிகழ்ச்சியின் அரச புரவலராகவும் இவர் இருக்கின்றார்.
எம்எஸ்யு தலைவரும் தோற்றுநருமான பேராசிரியர் டத்தோஸ்ரீ டான்ஸ்ரீ டத்தோ வீரா முகமட் சுக்ரி யாஜிட், எம்எஸ்யு இணை வேந்தர் பேராசிரியர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸைனி உஜான், எம்எஸ்யு துணை வேந்தர் பேராசிரியர் புவான் டத்தோஸ்ரீ ஜுனைனா அப்துல் கனி, எம்எஸ்யு உயர்நிலை நிர்வாகத்தினர் உள்ளிட்டவர்களும் இதில் கலந்துகொண்டனர். ஷா ஆலமில் உள்ள எம்எஸ்யு வளாகத்தில் இந்த சொங்கெட் ரன் ஓட்டம் தொடங்கியது. 5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளாக இந்த ஓட்டம் நடைபெற்றது.
இந்த ஓட்டம் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் முதலாக நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாது முறையாக கடந்த 2019ஆம் ஆண்டிலும் மூன்றாவது முறையாக கடந்த 2023ஆம் ஆண்டும், 2024 இல் நான்காவது முறையாகவும் நடத்தப்பட்டது. அதேவேளையில், இது மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்று வரலாறு படைத்தது.










