சபரிமலை ஐயப்பன் கோவிலின் கருவறை முன்பு “தத்துவமசி” சொல் பொறிக்கப்பட்டிருக்கும். சபரிமலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் சிலருக்கு இதன் சொல்லுக்கான பொருள் தெரியும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இதன் பொருள் தெரியாது. சபரிமலை யாத்திரையின் நோக்கத்தை உணர்த்தும் ஆழ்ந்த தத்துவம் கொண்டது தான் இந்த தத்துவமசி. இது ஒரு மகா வாக்கியம் ஆகும். இந்த பொருளை முழுவதுமாக உணர்ந்து, சபரிமலை ஐயப்பனின் மீது உண்மையான பக்தியுடன் பதினெட்டுபடி ஏறி செல்லும் பக்தனுக்கு சுவாமி ஐயப்பனின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
தத்துவமசி என்ற சொல்லை மூன்றாக பிரித்து பொருள் உணர்த்துகிறார்கள். அதாவது,
* தத் – அது. அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அல்லது இறைவன்.
* த்வம் – நீ. அதாவது மனிதனாகிய ஜீவாத்மா.
* அசி – இருக்கிறாய் அல்லது ஆகிறாய்.
* தத்வமசி – நீயே அதுவாக இருக்கிறாய்
நீ பரம்பொருளாக இருக்கிறாய். காடு, மலை என கடுமையான பாதையை கடந்து நீ எதை தேடி அல்லது எதை காண அல்லது எதை அடைய வந்தாயோ அது நீயாகவே இருக்கிறாய். உனக்குள்ளேயே இருக்கிறது. அதாவது, நீ தேடி வந்த இறைவன் என்னும் பரம்பொருள் உனக்குள்ளே இருக்கிறான். பக்தன் வேறு இறைவன் வேறு கிடையாது. கடுமையாக விரதம் இருந்து, கடுமையான பாதைகளை கடந்து நீ காண வந்த இறைவன் வெளியில் இல்லை. உனக்குள் தான் இருக்கிறான். எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் உனக்குள்ளும் இருக்கிறான் என்ற ஆழ்ந்த தத்துவத்தையே தத்துவமசி என்ற ஒற்றை சொல் உணர்த்துகிறது





















