ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநிலத்தின் தாமான் தம்போய் இண்டா பகுதியில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், பல்வேறு துறைகளில் சட்டவிரோதமாக பணிபுரிந்த மொத்தம் 92 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில், ஒரே நேரத்தில் பல வணிகப் பகுதிகளை குறிவைத்து இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தையல் கடைகள், அழகு நிலையங்கள், உணவகங்கள் ஆகியவை உட்பட பல வணிக வளாகங்கள் பரிசோதிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் 19 இந்திய ஆண்கள், 4 இந்திய பெண்கள், 19 மியான்மார் ஆண்கள், மற்ற நாடுகளை சேர்ந்த பலரும் அடங்குவர்.
அவர்களிடம் இருந்து தொடக்க நிலை விசாரணையில் பல்வேறு குடிநுழைவு சட்ட மீறல்கள், வேலை அனுமதியின்றி பணிபுரிதல், பாஸில் அனுமதி காலாவதியாகுதல் போன்ற குற்றச்சாட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 92 பேரும் மேலதிக விசாரணைக்காக செத்தியா டுரோப்பிக்கா குடிநுழைவுத் தடுப்புக் காவல் மையத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளதாக துறை தெரிவித்துள்ளது.
ஜோகூர் குடிநுழைவுத் துறை, மாநிலம் முழுவதும் இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், சட்டவிரோத நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.





















