கோலாலம்பூர்:
கம்போங் பண்டானில் ஆடவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறி, ஒரு உள்ளூர் நபர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக, இரண்டு மியன்மார் நாட்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வங்சா மாஜு மாவட்ட காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமட் லாசிம் இஸ்மாயில் தெரிவித்தார்.
அவரின் தகவல்படி, 22 வயதான பாதிக்கப்பட்டவர் நவம்பர் 30 நள்ளிரவில் சாலையில் மயக்கமடைந்து கிடந்தார். அவரது தலையில் ரத்தம் வழிந்தும், இடது உள்ளங்கையில் காயங்களும் இருந்தன என கூறப்படுகிறது. அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி, அதிகாலை 2.33 மணிக்கு அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர் என்றார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக மியன்மார் நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆண் சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 117 ன் கீழ் கோரப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவு, நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 வரை மூன்று நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
தாக்குதலின் ஆரம்ப காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.
இதற்கு முன்னதாக, குறித்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பாதிக்கப்பட்டவர் ஒரு குழுவினரால் தாக்கப்படுவதபாராங் கத்தி என நம்பப்படும் கூர்மையான ஆயுதத்தாலும் தாக்கப்பட்டிருப்பது தெளிவாகக் காணப்படுகிறது.













