கோம்பாக்கில் நிலச்சரிவு: மூன்று மாடி வீடு சேதம் – குடியிருப்பாளர்கள் அவசரமாக வெளியேற்றம்

கோலாலம்பூர் :

கோம்பாக்கின் கம்போங் தெங்காவில் நேற்றிரவு ஏற்பட்ட நிலச்சரிவில், மூன்று மாடி வீட்டின் மீது மரம் விழுந்ததால் அக்கட்டிடம் சேதமடைந்தது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சம்பவம் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு இரவு 7.30 மணியளவில் தகவல் கிடைத்ததையடுத்து, செலாயாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் மேற்கொண்ட சோதனைகளில், மரம் வீட்டின் மீது விழுந்த பகுதியில் சுமார் 20 மீட்டர் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது. இதனால், அந்த வீட்டின் கட்டமைப்பு பாதிக்கப்பட்டதால், குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

அத்துடன், கம்போங் புக்கிட் சுங்கை புதி, லெம்பா ஜெயா உதாராவில் மேலும் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். அந்த சம்பவம் குறித்து இரவு 7.09 மணிக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அம்பாங்க் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து குழுவினர் அனுப்பப்பட்டனர்.

அந்த இடத்தில் 12.1 மீட்டர் நிலச்சரிவு ஏற்பட்டு, இரண்டு ஒற்றை மாடி வீடுகளின் கூரைகள் சேதமடைந்திருந்தன. இருப்பினும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என அஹ்மட் முக்லிஸ் உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here