சுகாதார அமைச்சகத்தின் நிரந்தர மருந்தாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டு மீண்டும் திறக்கப்படும்

கோலாலம்பூர்:

சுகாதார அமைச்சகத்தில் நிரந்தர மருந்தாளர் (Pharmacist) பணியிடங்களுக்கான புதிய விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்றும், கூடுதல் காலியிடங்களுக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் ஒப்பந்த அதிகாரிகளுக்கு (Contract Officers) மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய பணியாளர் தேர்வு செயல்முறை முடிந்த நிலையில், அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 600 நிரந்தரப் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலேயே இந்த நிலை ஏற்பட்டது.

அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்களுக்கு மேல் கூடுதல் பணியிடங்கள் இல்லாத காரணத்தால், மீதமுள்ள ஒப்பந்த மருந்தாளர்களை நிரந்தரமாக்க முடியவில்லை.

ஏற்கனவே இருந்த நடைமுறைகளின்படி, ஒதுக்கப்பட்ட பட்டியலில் (Reserve Status) இருந்த விண்ணப்பதாரர்களின் நிலை அக்டோபர் 2025 உடன் காலாவதியாகிவிட்டதாகவும் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் அமைச்சகம் அளித்த விளக்கத்தில், தற்போது ஒப்பந்தத்தில் இருக்கும் தகுதியான மருந்தாளர்கள் அனைவரும், நிரந்தரப் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்படும்போது, மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட பட்டியலில் முன்னர் இருந்தவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்று அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நிரந்தரப் பணியிடங்கள் கிடைக்காததால், சுமார் 730 அரசாங்க மருந்தாளர்கள் நிலையற்ற தன்மையில் தவிப்பதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் இதுகுறித்து கூறுகையில், அக்டோபரில் நிரந்தரப் பணியிடங்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட 1,330 ‘மிதக்கும் அதிகாரிகள்’ (Floating Officers) பட்டியலில் அவர்கள் இருந்தனர். ஆனால், அவர்களில் 600 பேருக்கு மட்டுமே இறுதியில் நிரந்தரப் பதவிகள் கிடைத்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here