சிரம்பான்:
சிரம்பான்-கோலா பிலா சாலையில் உள்ள புக்கிட் புத்துஸ் (Bukit Putus) அருகே ஏற்பட்ட கோர சாலை விபத்தில் 33 வயதுடைய பெண் பல் மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் டாக்டர் எஸ். சிந்துஜா (Dr S. Siinthujaa) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கோலா பிலாவில் உள்ள துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில் (Hospital Tuanku Ampuan Najihah) பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று (புதன்கிழமை) காலை 8 மணியளவில் அவர் பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
மாவட்டக் காவல்துறைத் தலைவர் அஸஹார் அப்துல் ரஹிம் விபத்து குறித்துக் கூறுகையில்: டாக்டர் சிந்துஜா தனது காரில் கோலா பிலா நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்த் திசையில் 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஓட்டி வந்த எஸ்யுவி (SUV) ரக வாகனமும், சிந்துஜாவின் காரும் மோதிக்கொண்டன.
ஒரு வளைவில் காரைத் திருப்ப முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்த் திசையில் இருந்த பாதைக்குள் நுழைந்ததால் இந்த மோதல் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த விபத்தில் சிந்துஜாவுக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு வாகனத்தை ஓட்டி வந்த பெண் காயமின்றி தப்பினார்.
இந்த விபத்தைக் நேரில் பார்த்தவர்கள் அல்லது இது குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள், விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் தியூ சுவான் ஜியே (Insp Tiew Chuan Jie) அவர்களை 014-9668399 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த விபத்து குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.





















