‘GOAT’ படத்தில் விஜயுடன் நடிக்கும் விஜயகாந்த்; AI தொழில்நுட்ப முயற்சிக்கு பிரேமலதா ஒப்புதல்!

நடிகர் விஜய் நடிக்கும் ‘GOAT’ படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் திரையில் கொண்டு வருவதற்காக பிரேமலதாவிடம் அனுமதி கேட்டிருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. இதற்கு அவர் சம்மதமும் தெரிவித்து இருக்கிறாராம்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் ‘GOAT’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. செப்டம்பர் 5 -ம் தேதி ரிலீஸ் என அறிவித்த பின்பு படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் புரோமோஷனும் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் பிரபுதேவா, பிரஷாந்த், மோகன், லைலா, சிநேகா என நட்சத்திரப் பட்டாளமே இணைந்திருப்பது தெரிந்ததே!

ஆனால், படத்தில் அறிவிக்கப்படாத இரண்டு சர்ப்ரைஸைகளை படக்குழு வைத்திருந்தது. அதில் ஒன்று, நடிகை த்ரிஷா விஜயுடன் கேமியோவில் நடிப்பதோடு ஒரு பாடலுக்கும் நடனமாடுகிறார் என்பது. மற்றொன்று, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் படத்தில் நடிக்க வைக்க இருப்பது.

இதற்காக அனுமதி வாங்குவதற்காக இயக்குநர் வெங்கட்பிரபு, விஜயகாந்த் மனைவி பிரேமலதாவை சந்தித்து இருக்கிறார். பிரமேலதா உடனே சம்மதம் தெரிவித்த நிலையில், ”கேப்டன் உயிரோடு இருந்திருந்தால் தனது தம்பி விஜய்க்காக மறுக்காமல் படத்தில் நடித்துக் கொடுத்திருப்பார்” எனச் சொல்லி நெகிழ்ந்தாரா. தேர்தல் முடிந்த பிறகு நடிகர் விஜயும் இது தொடர்பாக பிரேமலதாவை நேரில் சந்திக்க இருக்கிறாராம்.

விஜய் சினிமாத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது விஜயகாந்த் ஹீரோவாக நடித்த ‘வெற்றி’ படத்தில்தான். விஜய் ஹீரோவாக மக்கள் மத்தியில் புகழ்பெறப் போராடிய சமயத்தில் அவருடைய ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து கைகொடுத்தது விஜயகாந்த்தான். இப்போது அவர் மறைந்தும் விஜய் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மீண்டும் வருகிறார்.

இதேபோல், விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் ‘படைத்தலைவன்’ படத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடித்தால் நிச்சயம் அது சண்முகப்பாண்டியனின் சினிமா கரியருக்கு பெரிய உதவியாக இருக்கும். ஆனால், அதுபற்றி விஜய் வாய்திறக்காமல் உள்ளது கேப்டன் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here