சைபர்ஜெயா:
கார்ப்பரெட் வரி நிர்வாகம் மிக சுமுகமாகவும் அர்த்தம் தரக்கூடியதாகவும் கார்ப்பரெட் வரி செலுத்துவோருக்குப் பலன் தரக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கு மலேசிய உள்நாட்டு வருமான வாரியம் (HASiL) அதன் முயற்சிகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டம் 2022 மார்ச் 1ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து வரி நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை HASiL தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது நேர்மைக்கும் உயர்நெறிக்கும் கார்ப்பரெட் வரி நிர்வாகத்திற்கும் மிக ஆழமான தாக்கத்தைத் தருவதற்கு ஓர் அடிப்படை அம்சமாகும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ டாக்டர் அபு தாரிக் ஜமாலுடின் கூறினார்.

இந்த நிலைப்பாடு தொடர்ந்து தர உயர்வு பெற்று கார்ப்பரெட் வரி நிர்வாகக் கட்டமைப்பு வழிகாட்டிகள் (TCGF) 2025 டிசம்பர் 1ஆம் தேதி முறைப்படுத்தப்பட்டது. இந்தப் புதிய வழிகாட்டிகள் HASÍL அதிகாரப்பூர்வ போர்ட்டலில் இடம்பெற்றுள்ளது.
வரி செலுத்துவோர் உட்பட சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் வழி பெறப்பட்ட பரிந்துரைகள், கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் இது தரம் உயர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வழிகாட்டியானது உலகளாவிய அளவில் மிகச்சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்னதாக இருந்த ஆண்டு மறு ஆய்வு நடைமுறைக்குப் பதிலாக TCGF ஆண்டு இட மதிப்பீட்டை அமல்படுத்துவதற்கு வலியுறுத்தியுள்ளது. வரி செலுத்துவதில் ஏற்படும் இடர்களைக் கண்காணித்து அதற்குத் தீர்வுகாணும் வழிகளை இந்த மதிப்பீடு வழங்குகிறது.
மேலும் இந்த வழிகாட்டியானது வரி செலுத்துவதில் உள்ள புரிதலை இன்னும் அதிகரிக்கச் செய்கிறது என்று HASiL நம்புகிறது.அதுமட்டுமன்றி இன்னும் அர்த்தமுள்ள வகையில் வரி நிர்வாகத்தைச் சரி செய்வதற்குரிய நிறுவன வியூகங்களைக் கொண்டிருப்பதற்கும் இது உதவுகிறது என்று டத்தோ டாக்டர் அபு தாரிக் கூறினார்.





















