கோலாலம்பூர்:
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA), முனையம் 1-இல் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த அறிமுகம் செய்யப்பட்ட வாகன அணுகல் மேலாண்மை அமைப்பு (VAMS), பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. டிசம்பர் 1-ஆம் தேதி முதல் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வந்த இந்த அமைப்பின் மூலம், விமான நிலைய முன்புறச் சாலைகளில் நிலவி வந்த குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன.
இந்த டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பு எண் தகடு அங்கீகார (License Plate Recognition – LPR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒவ்வொரு வாகனமும் நுழையும் மற்றும் வெளியேறும் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடுகிறது.
பயணிகள் தங்களின் உறவினர்களை இறக்கி விடுவதற்கோ அல்லது அழைத்துச் செல்வதற்கோ 10 நிமிடங்கள் இலவச அவகாசம் வழங்கப்படுகிறது.
இச்சோதனை ஓட்டத்தின் போது, 10 நிமிட வரம்பை மீறிய வாகனங்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது ஓட்டுநர்களிடையே ஒழுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை உறுதிப்படுத்துகிறது.
மேலும் 10 நிமிட கால அவகாசத்தை மீறும் வாகனங்களுக்கு, அவர்கள் தங்கியிருக்கும் நேரத்தைப் பொறுத்து RM10 முதல் RM100 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதனை Touch ‘n Go, கிரெடிட் கார்டு அல்லது MyDebit மூலம் செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.





















