Jualan Kasih Johor திட்டத்தின் கீழ் 45.4 மில்லியன் ரிங்கிட்டாக நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு – 7.5 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என எதிர்பார்ப்பு

ஜோகூர்:

ஜோகூர் மாநில அரசு தனது ‘Jualan Kasih Johor’ திட்டத்தின் கீழ் வாழ்க்கைச் செலவின ஆதரவுக்கான நிதியை விரிவுபடுத்தியுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி 45.4 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் டத்தோ ஆன் ஹபீஸ் காசி அறிவித்துள்ளார்.

மாநிலம் தழுவிய அளவில் சுமார் 7,50,200 குடும்பங்கள் இந்த விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் நேரடியாகப் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் நேற்று உரையாற்றிய ஆன் ஹபீஸ், ஆரம்பத்தில் இத்திட்டத்திற்காக இந்த ஆண்டு 15.4 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.

“மக்களிடமிருந்து கிடைத்த அமோக வரவேற்பு மற்றும் அடிமட்ட அளவில் எழுந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, கூடுதலாக 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு, மொத்த நிதி 45.4 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்தார். இதன் மூலம் மாநிலத்தின் 336 இடங்களில் இந்த மலிவு விலை விற்பனைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

‘Bantuan Kasih Johor – BKJ’ நலத்திட்டத்தின் கீழ் விடுபட்ட தகுதியுள்ள நபர்கள், உரிய வழிமுறைகள் மூலம் மேல்முறையீடு செய்யலாம் என்றும் மந்திரி பெசார் கூறினார்.

தரவு நகல் (Duplication) ஏற்படுவதைத் தவிர்க்கவும், சரியான பயனாளிகளை அடையாளம் காணவும் ICT@Johor அமைப்பு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

தகுதியிருந்தும் உதவி கிடைக்காதவர்கள் தங்கள் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க மாநில அரசு தயாராக உள்ளது என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here