அலோர் ஸ்டார்: ஹோட்டல் அறையில் RM135,900 மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்; ஒருவர் கைது!

அலோர் ஸ்டார், டிசம்பர் 24:

கெடா, அலோர் ஸ்டாரில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் போலீஸார் நடத்திய அதிரடிச் சோதனையில், சுமார் 1,35,900 ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 50 வயது மதிக்கத்தக்க உள்ளூர் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (டிசம்பர் 23) இரவு சுமார் 10 மணியளவில், கோத்தா ஸ்டார் மாவட்ட போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையில் மெத்தாம்பேட்டமின்: 1.19 கிலோ கிராம், ஹெராயின்: 67.4 கிராம், எரிமின் 5 (Erimin 5): 70 மாத்திரைகள் (சுமார் 20 கிராம்) ஆகிய போதைமருந்துகள் கைப்பற்றப்பட்டன என்று, கோத்தா ஸ்டார் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் சையத் பஸ்ரி சையத் அலி கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதைப்பொருட்கள் சுமார் 6,000 பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படக் கூடியவை. மேலும் சந்தேக நபரின் சிறுநீர் பரிசோதனையில் அவர் மெத்தாம்பேட்டமின் மற்றும் ஆம்பெட்டமின் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியது உறுதியானது.

அந்த நபருக்கு ஏற்கனவே 13 குற்றப் பதிவுகள் உள்ளன (5 போதைப்பொருள் தொடர்பானவை மற்றும் 8 இதர குற்றங்கள்). மேலும் விசாரணைக்கு உதவ அவரது ஹோண்டா CR-V காரையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சந்தேக நபர் வரும் டிசம்பர் 28-ஆம் தேதி வரை 5 நாட்கள் போலீஸ் தடுப்புக்காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு ‘ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952’-இன் பின்வரும் பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்படுகிறது:

மேலும் பிரிவு 39B: போதைப்பொருள் கடத்தல் (மரண தண்டனை அல்லது ஆயுள் சிறை விதிக்கப்பட வாய்ப்புள்ளது), பிரிவு 39A(1): போதைப்பொருள் கைவசம் வைத்திருத்தல், பிரிவு 15(1)(a): போதைப்பொருள் உட்கொள்ளுதல் ஆகிய சட்ட பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here