உத்தரப் பிரதேசத்தில் பள்ளி மாணவர்கள் செய்தித்தாள் வாசிப்பது கட்டாயம்

லக்னோ:

பள்ளி மாணவர்கள் இடையே உலக நடப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்தவும் ஏதுவாக பள்ளிகளில் செய்தித்தாள் வாசிப்பதை உத்தரப் பிரதேச அரசு கட்டாயமாக்கி உள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள துவக்கப் பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை மாணவர்கள் செய்தித்தாள்கள் வாசிப்பதைக் கட்டாயமாக்கி பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மாணவர்கள் நாள்தோறும் இந்தி, ஆங்கிலச் செய்தித்தாள்களை வாசிக்க பத்து நிமிடங்கள் ஒதுக்க வேண்டும் என்றும் தேசிய அனைத்துலக செய்திகளில் இருந்து முக்கியச் செய்திகளை ஒருவருக்கொருவர் வாசித்துக்காட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“இந்த நடவடிக்கையின் மூலம் மாணவர்களின் சொல்வளம், பொது அறிவு, விமர்சனச் சிந்தனை, கவனத்திறன், சமூக விழிப்புணர்வு மேம்படும். குறிப்பாக, போலிச் செய்திகளை அடையாளம் காண முடியும்,” என்று பள்ளிக் கல்வித்துறை, மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு கடந்த மாதம் அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் கைப்பேசி, சமூக ஊடகங்களில் மூழ்கிக்கிடப்பதைத் தடுக்க நாளேடுகள், புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here