ஜோகூர் பாரு:
ஜோகூர் பாரு, தாமான் மவுண்ட் ஆஸ்டினில் உள்ள உணவகம் ஒன்றில் கத்தி மற்றும் இரும்பு நாற்காலிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட பயங்கர மோதல் தொடர்பாக 12 மலேசிய ஆண்கள் மற்றும் ஒரு வியட்நாம் பெண் என மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை 3.50 மணியளவில் இந்த வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பான 35 வினாடி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். அந்த வீடியோவில், ஒரு கும்பல் அங்கிருந்தவர்களை இரும்பு நாற்காலிகளால் அடிப்பதும், கத்தியால் வெட்டுவதும் பதிவாகியுள்ளது என்று, ஜோகூர் பாரு தெற்கு மாவட்டப் போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ரவுப் செலாமாட் கூறினார்.
இந்தத் தாக்குதலில் இருவருக்குத் தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
தனிப்பட்ட கடன் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்த மோதலுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திலிருந்து 7 மொபைல் போன்கள், ஒரு கத்தி மற்றும் தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்ட ஆடைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்களில் 7 பேருக்கு ஏற்கனவே குற்றப் பின்னணி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
கைதானவர்களில் 6 பேருக்கு நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் கெட்டமைன் (Ketamine) போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதியானது.
இந்த வழக்கு மலேசியத் தண்டனைச் சட்டம் பிரிவு 148 (ஆயுதங்களுடன் கலவரம் செய்தல்) மற்றும் பிரிவு 326 (ஆபத்தான ஆயுதங்களால் படுகாயம் விளைவித்தல்) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது. இக்குற்றங்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஆண்கள் அனைவரும் 7 நாட்களும், வியட்நாம் பெண் 3 நாட்களும் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் சில சந்தேக நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.





















