குவந்தான்:
மாரான் மாவட்டத்தின் சென்னோர் அருகே உள்ள கெர்த்தாவ்-கோலா வாவ் சாலையில் நேற்று (டிசம்பர் 29, திங்கட்கிழமை) திடீர் பள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்தச் சாலையில் கனரக வாகனங்கள் செல்வதற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாரான் மாவட்ட போலீஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சென்னோர், கம்போங் பெய்ஜிங் (Kampung Peijing) பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சாலையின் அடியில் உள்ள ‘கல்வெர்ட்’ (Culvert) பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் நகர்வு காரணமாகச் சாலையில் சுமார் 30 மீட்டர் நீளத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி லோரி, பேருந்து போன்ற கனரக வாகனங்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கார், மோட்டார் சைக்கிள் போன்ற சிறிய வாகனங்கள் மட்டும் தற்காலிகமாக ஒரு வழிப் பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

பொதுப்பணித் துறை (JKR) தற்போது சம்பவ இடத்தில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் நிறைவடையும் வரை கனரக வாகனங்களுக்கான தடை தொடரும்.
இந்தச் சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேவைப்பட்டால் சென்னோர்-கம்பாங்-சினி (Chenor-Gambang-Chini) மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.





















