தொலைபேசி மோசடியில் சிக்கி டுங்கூனை சேர்ந்த ஓய்வுபெற்ற முதியவர் 420,000 ரிங்கிட்டை இழந்தார்!

டுங்கூன்:

TNB மற்றும் போலீஸ் அதிகாரிகள் போல நடித்து மர்ம நபர்கள் செய்த மோசடியில், 70 வயது முதியவர் ஒருவர் 420,410.48 ரிங்கிட் பணத்தை இழந்துள்ளார்.

கடந்த நவம்பர் 26 அன்று, பாதிக்கப்பட்ட முதியவருக்குத் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், தான் கோலாலம்பூர் TNB அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் முதியவரின் பெயரில் மின்சார மீட்டர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், டுங்கூன் மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்டெண்ட் மைசுரா அப்துல் காதிர் கூறியுள்ளார்.

இதனை முதியவர் மறுத்தபோது, அவரது அழைப்பு பகாங் மாநில போலீஸ் தலைமையகத்திற்கும், பின்னர் புக்கிட் அமானிற்கும் மாற்றப்பட்டது. அங்கு பேசிய நபர்கள், முதியவரின் பெயர் பணமோசடி (Money Laundering) வழக்கில் சிக்கியுள்ளதாகக் கூறி அவரைப் பயமுறுத்தியுள்ளனர்.

மேலும் அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணம் சட்டவிரோதமானது இல்லை என்பதை உறுதிப்படுத்த, அதனைச் சரிபார்க்க வேண்டும் எனக் கூறி, அந்தப் பணத்தை வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றச் சொல்லியுள்ளனர்.

இதனை நம்பிய முதியவர், மொத்தம் 11 முறை ஏழு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றியுள்ளார்.

அதுமட்டுமின்றி, போலீஸ் அதிகாரிகள் போல நடித்த இருவரிடம், தனது வீட்டின் அருகே வைத்துத் தனது வங்கி அட்டை மற்றும் அதன் ரகசிய எண்ணையும் (PIN) ஒப்படைத்துள்ளார்.

கூறியபடி தனது பணம் மீண்டும் திரும்பக் கிடைக்காதபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை முதியவர் உணர்ந்துள்ளார். நேற்று அவர் டுங்கூன் மாவட்டப் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

தற்போது இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420-இன் (மோசடி) கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here