பெலூரானில் நடந்த சாலை விபத்தில் கணவர் பலி, மனைவி படுகாயம்!

பெலூரான்:

பெலூரான் – தெலுபிட் (Telupid) சாலையில் உள்ள ஜாலான் தெலிசாய், சாபி நங்கோ (Jalan Telisai, Sapi Nangoh) பகுதியில் இன்று மதியம் நிகழ்ந்த விபத்தில் தம்பதியினர் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

பாதிக்கப்பட்ட தம்பதியினர் டொயோட்டா அன்சர் (Toyota Unser) ரக எம்பிவி வாகனத்தில் பெலூரானில் இருந்து தெலுபிட் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த நான்கு சக்கர வாகனத்துடன் (4WD) இவர்களது வாகனம் மோதியது.

இன்று (ஜனவரி 6, 2026) மதியம் சுமார் 12.57 மணியளவில் குறித்த விபத்து தொடர்பில் தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்துள்ளது என்றும், இந்த விபத்தில் டொயோட்டா அன்சர் வாகனத்தை ஓட்டிச் சென்ற கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் மருத்துவ அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைக்காகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று, பெலூரான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் எடோன் மச்சியல் (Edoen Macheal) கூறினார்.

விபத்தில் பலத்த காயமடைந்த அவரது மனைவி அவசரமாகப் பெலூரான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

விபத்துக்குள்ளான மற்றைய நான்கு சக்கர வாகனத்தில் இருந்த ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் என நால்வரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர் என்று அவர் மேலும் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களின் முழுமையான விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. போலீசார் இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here