கோலாலம்பூர், ஜனவரி 6:
மலேசியாவில் இந்த ஆண்டு முதல் வேப் எனப்படும் மின்-சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அகமட் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக, செயற்கை போதைப்பொருட்களைக் கலந்து பயன்படுத்தக்கூடிய ‘திறந்த போட்’ (Open Pod) முறைக்குத் தடை விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
2024-ஆம் ஆண்டு பொதுச் சுகாதாரத்திற்கான புகைபிடித்தல் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தை அமல்படுத்துவது, இளைய தலைமுறையினரை நுரையீரல் பாதிப்பு மற்றும் இதர நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் அறநெறிப் பொறுப்பாகும் என்று புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற 2026 புத்தாண்டு உரைக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
மேலும், இந்த விவகாரம் விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
அதே வேளையில், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவ நிபுணர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில், ‘ரக்கான் கே.கே.எம்’ (Rakan KKM) எனும் புதிய சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சைபர்ஜெயா மருத்துவமனை போன்ற அரசு மருத்துவமனைகளில் ‘பிரீமியம் எக்கனாமி’ தரத்திலான மருத்துவச் சேவைகளை வழங்கும் இத்திட்டம், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நோயாளிகளை வரவேற்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஏழை எளிய மக்களுக்கான மருத்துவ மானியங்களைத் தடையின்றி வழங்கவும், பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் சுகாதார அமைச்சு இலக்கு நிர்ணயித்துள்ளது.





















