(கோகி கருணாநிதி)
சிம்பாங் ரெங்காம்:
ஜோகூர் மாநிலத் தேர்தலின் மாச்சாப் சட்டமன்றத் தொகுதியில் பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் நேரடியாக மோதவுள்ளனர்.

வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பக்காத்தான் ஹராப்பான் சார்பில் நோர் ஹாஃபிஸ் ரோஸ்லான் காலை 9.03 மணிக்கும், பாரிசான் நேஷனல் சார்பில் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசி காலை 9.06 மணிக்கும் வேட்புமனுவைச் சமர்ப்பித்ததாக தேர்தல் ஆணைய அதிகாரி அறிவித்தார். இதனையடுத்து, மாச்சாப் தொகுதிக்கான இறுதிப் போட்டியில் இந்த இருவரும் மட்டுமே களமிறங்குவதாக அவர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.

கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேர்தலில், மாச்சாப் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசி, பெரிக்காத்தான் நேஷனலின் அஸ்லிஷாம் அசஹார், பெஜுவாங் தானா ஆயிரின் டத்தோ டாக்டர் ஷாருடின் முகமது சாலே, மூடா கட்சியின் ஆர். சங்கரன் ஆகியோருடன் நடைபெற்ற நான்கு முனைப் போட்டியில் 6,543 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருந்தார். இம்முறை, அவர் பக்காத்தான் ஹராப்பானின் நோர் ஹாஃபிஸ் ரோஸ்லானை நேரடியாக இருமுனைப் போட்டியில் எதிர்கொள்கிறார்.

ஜோகூர் மாநில சட்டமன்றம், ஜோகூர் ஆட்சிப் பிரதிநிதி துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதலைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 1ஆம் தேதி கலைக்கப்பட்டதாக டத்தோ ஓன் ஹாஃபிஸ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ளதுடன், முன்கூட்டிய வாக்குப்பதிவு ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

2022 மார்ச் 12ஆம் தேதி நடைபெற்ற முந்தைய ஜோகூர் மாநிலத் தேர்தலில், 56 தொகுதிகளில் 40 இடங்களை வென்ற பாரிசான் நேஷனல் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது. பக்காத்தான் ஹராப்பான் 12 இடங்களையும், பெரிக்காத்தான் நேஷனல் 3 இடங்களையும், மூடா ஒரு இடத்தையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.




















