பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கம்: “எனக்கு முறையான நீதி வழங்கப்படவில்லை” – சைஃபுடின் அப்துல்லா சரமாரி குற்றச்சாட்டு!

கோலாலம்பூர்:

பெர்சத்து கட்சியிலிருந்து தாம் நீக்கப்பட்ட விவகாரத்தில், இயற்கை நீதி மற்றும் நியாயமான விசாரணைக்கான கோட்பாடுகள் பின்பற்றப்படவில்லை என்று இண்டெரா மாஹ்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சைஃபுடின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணையின் போது, தாம் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்ததாக அவர் இன்று (ஜனவரி 7, 2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்:

ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள இரு உறுப்பினர்கள், கட்சியின் மூத்த தலைவர்களுடன் குடும்ப உறவுமுறை கொண்டவர்கள். எனவே, அவர்கள் எனது வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பது அவரது முதல் கோரிக்கை.

இரண்டாவதாக “என் மீதான புகாரை விசாரித்தவர் யார் மற்றும் வழக்கைத் தொடர்ந்தவர் யார் என்ற விபரங்களைக் கோரினேன். விசாரணை செய்பவர், வழக்கைத் தொடருபவர் மற்றும் தீர்ப்பு வழங்குபவர் ஆகிய மூவரும் தனித்தனி நபர்களாக இருந்தால்தான் நீதி கிடைக்கும் என்றும், மூன்றாவதாக இந்த விசாரணையின் போது கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நேரில் முன்னிலையாக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

“இந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே நான் அடுத்த கட்ட விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறினேன். ஆனால், ஜனவரி 6 வரை இதைப் பற்றி எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை.”

“திடீரென ஜனவரி 6-ஆம் தேதி, கட்சியின் அரசியலமைப்பு பிரிவு 9.1.4-ஐ மீறியதாகக் கூறி என்னை நீக்குவதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.” இந்த விசாரணை முறை ஒருதலைப்பட்சமானது என்றும், ஒரு தரப்புக்குச் சாதகமாகச் செயல்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

தனக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை எதிர்த்து கட்சியின் மேல்முறையீட்டு வாரியத்தில் (Appeal Board) மனு தாக்கல் செய்யப்போவதாகச் சைஃபுடின் உறுதிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here