கோலாலம்பூர்:
சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்தாபாக் (Setapak) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியிலிருந்து தனது நான்கு வயது வளர்ப்பு பேரனைக் கீழே வீசிக் கொலை செய்த வழக்கில், 48 வயது நைஜீரியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இபெக்வே எமேகா அகஸ்டின் (Ibekwe Emeka Augustine) என்ற 48 வயதான குற்றவாளி, கடந்த நவம்பர் 29, 2020 அன்று காலை 7.45 மணி முதல் 8.15 மணிக்குள் இந்த கொடூரச் சம்பவத்தை செய்தாக குற்றம் சாட்டப்பட்டது.
போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான அகஸ்டின், தனது பேரனின் கால்களைப் பிடித்து ஜன்னல் வழியாகத் தொங்கவிட்டு, பின்னர் கீழே வீசியுள்ளார். இதனை அந்தச் சிறுவனின் தாய் நேரில் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கொலைக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தவிர, அதே நாளில் அவர் செய்த மற்ற நான்கு குற்றங்களுக்காக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது:
அதில் தனது சொந்த மகனைக் கொலை செய்ய முயற்சித்தது, தடுக்க வந்த மனைவியைக் கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியது (மனைவியின் இடுப்பு எலும்பு முறிந்தது), தற்கொலைக்கு முயற்சி செய்தது மற்றும்
தனது வளர்ப்பு மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது ஆகிய குற்றங்களும் அடங்கும்.
வழக்கை விசாரித்த நீதிபதி கே. முனியாண்டி தனது தீர்ப்பில்: “குற்றவாளியின் செயல்கள் ‘மனிதாபிமானமற்றவை மற்றும் அருவருப்பானவை’. ஒரே நாளில் இத்தனை கொடூரங்களை அவர் நிகழ்த்தியுள்ளார்,” என்றும் சாடினார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் சாய்லீன் நாடியா ஜுபிர், இது போதைப்பொருளால் தானாகவே வரவழைக்கப்பட்ட ஒரு குற்றம் என்பதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார். 22 அரசுத் தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.




















