கோலாலம்பூர்:
தேசிய இராணுவபடையின் முன்னாள் தளபதி ஜெனரல் டான்ஸ்ரீ முகமட் ஹபிசுடின் ஜந்தான், தனது பதவியிலிருந்து முன்கூட்டியே ஓய்வு பெற விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
முகமட் ஹபிசுடினின் வழக்கறிஞரிடமிருந்து இது தொடர்பான கடிதம் இன்று தமக்குக் கிடைத்ததாகப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
இந்த ஓய்வு கடந்த ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் கோரப்பட்டுள்ளது.
இந்தத் திடீர் ஓய்வு விண்ணப்பத்தைத் தொடர்ந்து, காலியாக உள்ள இடத்திற்குப் புதிய அதிகாரியைத் தேர்ந்தெடுக்கும் பணிகளைத் பாதுகாப்பு அமைச்சு தொடங்கியுள்ளது.
இதற்கு முன்னதாக, முகமட் ஹபிசுடினை ‘பாதுகாப்புப் படைத் தலைவராக’ (Chief of Defence Forces) நியமிக்க ஆயுதப் படைக் கவுன்சில் முடிவு செய்திருந்தது. இருப்பினும், அவர் எதிர்கொண்டு வரும் ஊழல் விசாரணை (MACC Investigation) காரணமாக அந்த நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் வகையில், ஜெனரல் டத்தோ அஜான் முகமட் ஒஸ்மான் (General Azhan Md Othman) மலேசியாவின் 31-வது இராணுவத் தளபதியாக ஏற்கனவே நியமிக்கப்பட்டு, ஜனவரி 6-ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார்.
முகமட் ஹபிசுடின் மற்றும் அவரது இரண்டு மனைவிகள் மீது இராணுவ கொள்முதல் தொடர்பான ஊழல் புகாரில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புப் படையின் நேர்மையையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்ட இந்த விசாரணை அவசியம் என அமைச்சர் காலிட் நோர்டின் செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தினார்.




















