சிபு:
சரவாக் மாநிலம், மிரி மாவட்டத்தில் உள்ள ‘உட்மேன் எஸ்டேட்’ (Woodman Estate) தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் இன்று (ஜனவரி 18, 2026) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒரு தம்பதியினர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 37 வயதுடைய பெரெய்ன் ஸ்காம் (Berain Skam) மற்றும் அவரது மனைவி டெரிட் லெஞ்சாவ் (Terit Lenjau) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அந்த குடியிருப்பின் ‘யுனிட் ஏ’ (Unit A) பிரிவில் வசித்து வந்தனர். அதேநேரம் பக்கத்து வீடான ‘யுனிட் பி’-யில் வசித்து வந்த 5 பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை என மொத்தம் 6 பேர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர்.
இந்த தீ சம்பவத்தில் சுமார் 40-க்கு 30 சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த மரப்பலகையிலான குடியிருப்பு முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது.
குறித்த சம்பவம் தொடர்பில், இன்று காலை 5:59 மணியளவில் லோபெங் (Lopeng) தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது என்றும், ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே, அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் 30 தீயணைப்பு உருளைகள் மற்றும் 3 தண்ணீர் பம்புகளைப் பயன்படுத்தித் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் என்றும் கூறப்படுகிறது.
தீயணைப்பு வீரர்கள் வந்து சேர்வதற்குள் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





















