பொது இடத்தில் குப்பை போட்டால் சிறை! புதிய சட்டத்தின்கீழ் சிக்கிய இரு வெளிநாட்டினர்!

ஜோகூர் பாரு:

லேசியாவில் பொதுத் தூய்மையைப் பேணுவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்தின் கீழ், பொது இடத்தில் குப்பை வீசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முதல் இரு நபர்கள் ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் இருவரும் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவைச் சேர்ந்த அனிதா லுக்மான் (49) மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த சுல்தான் முகமட் (28) ஆகிய இருவர் மீதும் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு தினத்தன்று ஜோகூர் பாரு, ஸ்டுலாங் லாவோட் பகுதியில் குப்பை போட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

அனிதா லுக்மான், நடைபாதையில் சிகரெட் துண்டு மற்றும் காலி பாட்டிலை வீசிய குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

“நான் ஒரு தனித்து வாழும் தாய். எனது இரு குழந்தைகளின் கல்விச் செலவுக்காகக் கடுமையாக உழைத்து வருகிறேன். தயவுசெய்து எனக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்குங்கள்,” என்று அவர் கண்ணீர் மல்க நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அனிதாவின் சூழலைக் கருத்தில் கொண்ட நீதிபதி நோர் அசியாட்டி ஜாஃபர், அவருக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதித்தார். அதனைத் தவிர்க்க வேண்டுமானால், 500 ரிங்கிட் அபராதம் செலுத்துவதுடன், 6 மணிநேரம் சமூக சேவை (குப்பை அள்ளுதல் போன்ற தூய்மைப் பணி) செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

சமூக சேவை உத்தரவை 6 மாத காலத்திற்குள் நிறைவேற்றத் தவறினால், 2,000 முதல் 10,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இதே பகுதியில் குப்பை போட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சுல்தான் முகமட், பங்களாதேஷி மொழிபெயர்ப்பாளர் ஒருவரைத் தனது வாதத்திற்காகக் கோரினார். இதனையடுத்து, அவரது வழக்கு வரும் ஜனவரி 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மைக் கழகத்தின் (SWCorp) வழக்கறிஞர் சித்தி அடோரா கூறுகையில், “இந்தத் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். பொது இடங்களில் குப்பை போடுவது இனி ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படாது,” என்று தெரிவித்தார்.

மலேசியாவின் தூய்மையைப் பாதுகாக்க அரசு எடுத்துள்ள இந்தத் தீவிர நடவடிக்கை, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here