விமானங்களில் கலக்கும் மலேசிய இளநீர்: உலகை ஈர்க்கும் உள்ளூர் தொழில்முனைவரின் சாதனை!

கோலாலம்பூர்:

சாலை ஓரக் கடைகளில் மட்டுமே கிடைக்கும் சாதாரணப் பானமாக இளநீரைக் கருதாமல், அதனை ஒரு ‘பிரீமியம்’ (Premium) தரத்திலான பானமாக மாற்றிச் சாதனை படைத்துள்ளார் நவநீத் பிள்ளை.

இவரது ‘Strategis NP Asia’ நிறுவனத்தின் பாட்டிலில் அடைக்கப்பட்ட இளநீர், தற்போது Batik Air விமான நிறுவனத்தின் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பயணங்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

விமானத் துறையில் உணவுப் பாதுகாப்பு விதிகள் மிகக் கடுமையானவை. பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு, எந்தவிதமான பதப்படுத்திகளும் (Preservatives) மற்றும் கூடுதல் சர்க்கரையும் சேர்க்கப்படாத இவரது இயற்கை இளநீர் அங்கீகாரம் பெற்றது.

நீண்ட தூர விமானப் பயணங்களின் போது ஏற்படும் உடல் வறட்சியைத் தடுக்கவும், ‘ஜெட் லேக்’ (Jet lag) பாதிப்பைக் குறைக்கவும் இளநீர் பெரிதும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

முன்பு புத்தக வெளியீட்டாளராகப் பணியாற்றிய நவநீத், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் விவசாயத்தில் இறங்கினார்.

முதலில் கோலா சிலாங்கூரில் இருந்து சில இளநீர்களை வாங்கி வந்து கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் விற்பனை செய்தார். தற்போது இவரது தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 3,000 முதல் 10,000 பாட்டில்கள் வரை இளநீர் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும் இதில் கழிவாக வரும் தேங்காய் மட்டைகளை வீணாக்காமல், அவற்றை உரமாக்கி மீண்டும் தென்னந்தோப்புகளுக்கே வழங்கும் ‘சுற்றுச்சூழல் நட்பு’ முறையை இவர் பின்பற்றுகிறார்.

மலேசியாவின் தென்னை விதைகள் உலகிலேயே மிகச் சிறந்தவை என்று கூறும் நவநீத், அவற்றை “வெள்ளை பெட்ரோலியம்” என்று அழைக்கிறார். தற்போதைய நிலையில் சிங்கப்பூர் சந்தையில் வெற்றிகரமாக நுழைந்துள்ள இவர், அடுத்ததாகத் தரம் குறையாமல் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

“ஒரே ஒரு பொருளில் மட்டும் முதலில் கவனம் செலுத்துங்கள். நவீனத் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி உங்கள் வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்பில் இருங்கள்” என்பதே புதிய தொழில்முனைவோருக்கு நவநீத் வழங்கும் ஆலோசனையாகும்.a

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here