கோலாலம்பூர்:
மலேசியாவில் முறையான வேலைவாய்ப்புகளில் (Formal Sector) உள்ள தொழிலாளர்களின் ஊதிய விகிதம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக மலேசியத் தலைமைப் புள்ளிவிவர நிபுணர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 2025-ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்களின்படி, மலேசியாவின் மொத்த முறையான தொழிலாளர்களில் 8.6 சதவீதத்தினர், மாதம் 10,000 ரிங்கிட் மற்றும் அதற்கு மேல் ஊதியம் பெறுகின்றனர். இது நாட்டின் உயர்தர வேலைவாய்ப்புகள் மற்றும் நிபுணத்துவத் துறைகளின் வளர்ச்சியைக் காட்டுகிறது.
அதேநேரம் சுமார் 8.8 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே மாதம் 1,700 ரிங்கிட்டிற்கும் குறைவான ஊதியத்தைப் பெற்றுள்ளனர் என்று அவர் சொன்னார்.
இது 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 13.5 சதவீதப் புள்ளிகள் வீழ்ச்சியாகும். அதாவது, மிகக் குறைந்த ஊதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து, மாறாக அவர்களின் வருமான நிலை உயர்ந்துள்ளது என்றார்.
அரசாங்கம் அமல்படுத்திய புதிய குறைந்தபட்ச ஊதியக் கொள்கை மற்றும் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளின் காரணமாகவே, மிகக் குறைந்த ஊதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக டாக்டர் முகமட் உசிர் குறிப்பிட்டார்.




















