போர்ட் கிள்ளானில் அதிரடி: 5.75 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

கோலாலம்பூர்:

கடந்த மாதம் மேற்கு மற்றும் வடக்கு துறைமுகங்களில் (West Port & North Port) மேற்கொள்ளப்பட்ட இரண்டு தனித்தனி சோதனைகளின் மூலம் இந்த பெரும் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் சுங்கத்துறை இயக்குனர் முகமது அசார் அகமட் பஹாராசி தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 18ஆம் தேதி முதல் சோதனை (மேற்கு துறைமுகப் பகுதியில் நடந்தது. இதில் 37,128 லிட்டர் பீர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர், இவற்றின் மதிப்பு 1.39 மில்லியன் ரிங்கிட் (வரி உட்பட) என்று அவர் சொன்னார்.

ஆசிய நாடு ஒன்றிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த பீர் கொள்கலன், தவறான தகவல்களைக் கொடுத்து இறக்குமதி செய்ய முயன்றபோது சிக்கியது. மதுபான இறக்குமதிக்குத் தேவையான முறையான அனுமதிப்பத்திரம் (Import Permit) இதனிடம் இல்லை.

இரண்டாவது சோதனை, கடந்த டிசம்பர் 29 வடக்கு துறைமுகத்தில் நடந்தது. இதில் 6,250 கிலோ சுருட்டு மற்றும் 3,900 கிலோ அரிசி என்பன பறிமுதல் செய்யப்படடன. இதன் மதிப்பு 4.35 மில்லியன் ரிங்கிட் (வரி உட்பட) என்றும் அவர் சொன்னார்.

இந்தக் கொள்கலனில் இருந்த பொருட்கள் “காலணிகள்” (Footwear) எனத் தவறாகப் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. சோதனையில் உள்ளே சுருட்டுகளும் அரிசியும் இருப்பது கண்டறியப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட சுருட்டுகள் இங்குள்ள வெளிநாட்டினருக்காகவும், அரிசி பொதுச் சந்தைக்காகவும் கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து 1967-ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் பிரிவு 135(1)(a)-இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முறையான இறக்குமதி ஆவணங்கள் இன்றி பொருட்களைக் கடத்தி வருவது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்பதால், சுங்கத்துறை தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here