தமிழ் மொழி என்பது அடையாளம் மட்டுமல்ல; அது ஒரு வாழ்வியல் முறை – சரவணன்

Screenshot

மலேசியாவில் தமிழ் மொழிக் கல்வி, தமிழ்ப் பள்ளிகளின் எதிர்காலம் குறித்து டான்ஸ்ரீ பாலன் உடனான சிறப்புப் நேர்காணல் ஒன்றில் முன்னாள் மனிதவள அமைச்சரும் ம.இ.கா துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல, அது தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம், சமயம் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்த ஒரு வாழ்வியல் முறை என்று குறிப்பிட்டார்.

ஒரு சமூகத்தின் அடையாளத்தை அழிக்க வேண்டுமென்றால் முதலில் அதன் மொழியை அழிக்க வேண்டும் என்றும், அதனால் தமிழ் மொழியைத் தற்காப்பது நமது இருப்புக்கான போராட்டம் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழ்ப் பள்ளிகளின் தற்போதைய சவால்கள் குறித்துப் பேசுகையில், தொடக்கப் பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிக்கப்பட்டாலும், இடைநிலைப் பள்ளிகளில் அந்தத் தொடர்ச்சி இல்லாமல் போவதே பெரிய குறைபாடாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, ஒரு வகுப்பில் தமிழ் பயில குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும் என்ற விதிமுறை பல மாணவர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாக உள்ளது. பல மில்லியன் நிதியைத் தொடக்கப் பள்ளிகளுக்குச் செலவிடும் அரசாங்கம், இடைநிலைப் பள்ளிகளிலும் தமிழ் மொழிக் கல்வி தடையின்றித் தொடர்வதை உறுதி செய்ய முறையான ஒரு கண்காணிப்புப் பொறிமுறையை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். முன்பு தோட்டப்புறத் தொழிலாளர்களின் பிள்ளைகள் மட்டுமே தமிழ்ப் பள்ளிகளுக்குச் சென்ற நிலை மாறி, இன்று நடுத்தர மற்றும் உயர்மட்ட வர்க்கத்தைச் சேர்ந்த பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிகளில் சேர்த்து வருவது ஒரு ஆரோக்கியமான மாற்றம் என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழ்ப் பள்ளி மாணவர்கள் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களிலும் சிறந்த தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருவதை அவர் பெருமையுடன் சுட்டிக்காட்டினார். இருப்பினும், தமிழ்ப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு அரசாங்கம் இன்னும் தீவிரமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை (Affirmative Action) எடுக்க வேண்டியது அவசியம் என்றார். இறுதியாக, தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு அரசியல் சித்தாந்தங்களைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

தனியார் நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒவ்வொரு தமிழ்ப் பள்ளியைத் தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்கு உதவலாம் என்ற கருத்தை முன்மொழிந்த அவர், இதற்காக ஓர் அரசியல் சார்பற்ற தளத்தை உருவாக்குவது காலத்தின் கட்டாயம் என்றார். இந்தியச் சமூகம் ஒருமித்த குரலில் நின்றால் மட்டுமே தமிழ் மொழிக் கல்வியின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்று டத்தோ ஸ்ரீ சரவணன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

– ராமேஸ்வரி ராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here