பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் கஞ்சா: குளுவாங் முதிய தம்பதி மீது குற்றச்சாட்டு!

கோலாலம்பூர், ஜனவரி 30:

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருட்களைத் தம்வசம் வைத்திருந்ததாக 60 வயதைக் கடந்த தம்பதியினர் மீது இன்று குளுவாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

64 வயதுடைய ஓங் கிம் சூ மற்றும் அவரது மனைவியான 61 வயது கோ யா (Koh Yaw) ஆகிய இருவர் மீதும் நீதிபதி முஜிப் சரோஜி முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

கடந்த ஜனவரி 22-ஆம் தேதி நள்ளிரவு 12:30 மணியளவில், ‘தாமான் ஸ்ரீ குளுவாங்’ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினர்.

அந்தச் சோதனையின் போது, பிரேசில் தயாரிப்பான ‘Taurus Brasil’ ரக ரிவால்வர் துப்பாக்கி, 33 தோட்டாக்கள் மற்றும் சுமார் 84.54 கிராம் எடையுள்ள கஞ்சா ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

இத்தம்பதியினர் மீது இரண்டு முக்கியச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது: 1971-ஆம் ஆண்டு துப்பாக்கிச் சட்டம் (மேம்படுத்தப்பட்ட தண்டனை): இச்சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் குறையாத 6 பிரம்படிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மற்றையது 1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டம்: கஞ்சா வைத்திருந்ததற்காக இச்சட்டப்பிரிவின் கீழும் அவர்கள் விசாரணையை எதிர்கொள்கின்றனர்.

வயோதிக நிலையில் உள்ள இத்தம்பதியினர் இவ்வளவு அபாயகரமான ஆயுதங்களை எதற்காக வைத்திருந்தார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here