கோலாலம்பூர்:
மலேசியாவிலும் சர்வதேச அளவிலும் ஃபெங் சுயி கலையில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்த ‘குட் ஃபெங் சுயி’ (Good Feng Shui) ஆய்வு மையத்தின் நிறுவனர் மாஸ்டர் கென்னி ஹூ (ஜனவரி 30) காலமானார்.
அவரது மகள் டாக்டர் ஹூ கே தியான் வழங்கிய தகவலின்படி: திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.
பினாங்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அதிகாலை 2.00 மணியளவில் அவரது மறைவு நிகழ்ந்தது.
ஃபெங் சுயி கலையை வெறும் நம்பிக்கையாகப் பார்க்காமல், ஒரு ‘அறிவியல்’ கண்ணோட்டத்துடன் உலகிற்கு எடுத்துரைத்தவர் இவர்.
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவின் முன்னணி ஊடகங்களில் ராசி பலன்கள் மற்றும் வாஸ்து ஆலோசனைகளை வழங்கி வந்தார். குறிப்பாக ‘பெர்னாமா டிவி’-யில் சீனப் புத்தாண்டு காலங்களில் அவர் வழங்கும் கணிப்புகள் மிகவும் பிரபலம்.
இவர் உருவாக்கிய “Good Feng Shui Converge Water Technique” எனும் தனித்துவமான முறைக்காகப் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளார்.
அவரது இறுதிச் சடங்குகள் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி, கோலாலம்பூரில் உள்ள நிர்வானா சென்டரில் (Nirvana Centre KL) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















