கோலாலம்பூர்:
சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக, 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு 7.10 மணியளவில் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் பினாங்கு மாநில போலீசார் இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் பகுதியில் வைத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
கடந்த மே 2-ம் தேதி, “Lucas Liam” என்ற ஃபேஸ்புக் கணக்கில் சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையிலான படங்கள் மற்றும் கருத்துகள் பதிவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 12 போலீஸ் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
“மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்துடன் (MCMC) இணைந்து மேற்கொண்ட விசாரணையில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார். அவரிடமிருந்து இரண்டு கைபேசிகள் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று, இது குறித்து புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ எம். குமார் கூறினார்.
கைது செய்யப்பட்ட நபர் மீது தேசத்துரோகச் சட்டம்: பிரிவு 4(1), தண்டனைச் சட்டம்: பிரிவு 504, MCMC சட்டம்: பிரிவு 233 இன் கீழ் ஆகிய சட்டங்களின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
இனம், மதம் மற்றும் அரச குடும்பம் (3R) தொடர்பான உணர்ச்சிகளைத் தூண்டி, நாட்டின் அமைதியைக் குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை மீண்டும் எச்சரித்துள்ளது.





















