கோலாலம்பூர்:
சட்டவிரோத தகர மணல் கடத்தல் வழக்கில் தொடர்புடைய 11 இந்தோனேசிய மாலுமிகளை மலேசியக் கடல்சார் அமலாக்க முகமை (MMEA) கடந்த வியாழக்கிழமை இந்தோனேசிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி, ஜோகூர், தீமோன் தீவு அருகே ஒரு ஃபைபர் படகை அதிகாரிகள் மறித்தனர். அந்தப் படகில் இந்தோனேசியாவின் பாங்கா பெலிடுங் தீவுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட 7.5டன் மணல் இருப்பது கண்டறியப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் தகர மணலின் மதிப்பு சுமார் 1.1 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைதான 11 பேரும் 23 முதல் 53 வயதுக்குட்பட்டவர்கள். முறையான பயண ஆவணங்கள் இன்றி மலேசியாவிற்குள் நுழைந்ததற்காக அவர்களுக்கு 3 மாத சிறைத்தண்டனை அல்லது 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
தண்டனை காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் ஜோகூர் பாருவில் உள்ள இந்தோனேசியத் தூதரகம் வழியாக பத்தாம் (Batam) நகருக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களுடன் சேர்ந்து மேலும் 122 இந்தோனேசியத் தொழிலாளர்களும் நாடு கடத்தப்பட்டனர்.
தற்போது இந்தோனேசியா திரும்பிய 11 மாலுமிகளும், அந்நாட்டின் தேசியப் புலனாய்வுத் துறையினரால் (Bareskrim Polri) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இதற்கு முன்பும் பலமுறை இது போன்ற கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
தகர மணல் என்பது தகரம் (Tin) எடுக்கப் பயன்படும் ஒரு விலைமதிப்பற்ற கனிமமாகும். இது சட்டவிரோதமாக அகழ்ந்து எடுக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க இந்தோனேசியா கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பிடிபட்ட படகு மற்றும் மணல் ஆகியவை இன்னும் மலேசியக் கடல்சார் அமலாக்க முகமையின் (பகாங் பிரிவு) வசமே உள்ளன.

























