கோலாலம்பூர், பிப்ரவரி 8, 2026:
மெக்டோனல்ட்ஸ் மலேசியா நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக ஒரு பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 100 புதிய உணவகங்கள் திறக்கப்பட உள்ளன.
இந்த ஒரு பில்லியன் ரிங்கிட் முதலீடு மூன்று முக்கிய பிரிவுகளாகச் செலவிடப்படும் என்று, மெக்டோனல்ட்ஸ் மலேசியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டத்தோ அஸ்மிர் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
அதில் RM600 மில்லியன் 100 புதிய உணவகங்களைத் திறப்பதற்கும், RM200 மில்லியன் தற்போதுள்ள 150-க்கும் மேற்பட்ட பழைய உணவகங்களை நவீனப்படுத்த மற்றும் மறுசீரமைப்பதற்கும் மீதி RM200 மில்லியன்: மின்னிலக்கத் திறன் (Digitalization) மற்றும் புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்த விரிவாக்கத்தின் மூலம் மலேசியர்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். நிறுவனம் 100% உள்ளூர் ஊழியர்களைப் பணியமர்த்தும் கொள்கையைக் கொண்டுள்ளது.
தீபகற்ப மலேசியா தவிர, சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் உள்ள சிறு நகரங்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.
மெக்டோனல்ட்ஸ் பயன்படுத்தும் உணவு மற்றும் பேக்கேஜிங் பொருட்களில் 75% உள்ளூரிலேயே (Malaysian SMEs) கொள்முதல் செய்யப்படுவதால், உள்ளூர் வணிகங்களும் இதனால் பயனடையும்.
மேலும் தற்போதுள்ள 25 உரிம கிளைகளை (Franchised outlets), அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் 70 முதல் 100-ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீடு மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று டத்தோ அஸ்மிர் ஜாஃபர் மேலும் தெரிவித்தார்.





















