ஜோகூர் குடியிருப்புப் பகுதி அருகில் கட்டப்படும் தரவு மையத்தால் குடியிருப்பாளர்கள் அதிருப்தி

மலேசியாவில் தரவு மையங்களின் எண்ணிக்கை மிக விரைவாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மலேசியாவில் தரவு மையம் தொடர்பான ஆர்ப்பாட்டம் முதல்முறையாக சனிக்கிழமையன்று (பிப்ரவரி 7) நிகழ்ந்தது.

ஜோகூர் மாநிலத்தில் கெலாங் பாத்தாவில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு அருகில் தரவு மையம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் காரணமாக அப்பகுதியில் காற்று, தண்ணீர் மாசுபாடு ஏற்பட்டுள்ளதாக அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.

ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கட்டுமானத் தளத்துக்கு முன்பு கூடி எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்பகுதியில் தரவு மையம் கட்டப்படுவதால் தங்கள் வீடுகளுக்கான குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என்று அவர்கள் கவலை தெரிவித்தனர். காற்று, தண்ணீர் மாசுபாடு காரணமாகக் குடியிருப்பாளர்களின் உடல்நிலை பாதிக்கப்படக்கூடும் என்றும் அவ்வாறு நேர்ந்தால் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குடியிருப்பாளர்கள் கூறினர்.

சீனாவின் ஸிடேட்டா டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்காகத் தரவு மையம் கட்டப்படுகிறது.

இருப்பினும் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சம்பந்தப்பட்ட சொத்து மேம்பாட்டாளர்கள் சந்தித்துப் பேசவில்லை.

காவல்துறையினர் பலர் சூழ்ந்திருக்க, 90 நிமிடங்கள் கழித்து ஆர்ப்பாட்டம் நடத்திய குடியிருப்பாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here