ரிங்கிட் – இந்திய ரூபாய் நேரடி வர்த்தகம்: இந்தியா – மலேசியா இடையே புதிய நிதிப் புரட்சி!

கோலாலம்பூர், பிப்ரவரி 8, 2026:

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் மலேசிய மத்திய வங்கி (Bank Negara Malaysia – BNM) ஆகியவை தத்தமது உள்ளூர் நாணயங்களிலேயே (ரூபாய் மற்றும் ரிங்கிட்) வர்த்தகத் தீர்வுகளை மேற்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்தியப் பிரதமர் மோடி மற்றும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில், அமெரிக்க டாலருக்கு மாற்றாக உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவதற்கு இரு தலைவர்களும் தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர் என்று, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் (கிழக்கு) பி. குமரன் கூறினார்.

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செலவுகள் குறையும். தற்போது இரு நாட்டு மத்திய வங்கிகளும் இதன் தொழில்நுட்ப நடைமுறைகள் குறித்துத் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இந்தியாவின் என்ஐபிஎல் (NIPL) மற்றும் மலேசியாவின் பே-நெட் (PayNet) இடையே கியூஆர் (QR) குறியீடு மூலம் எல்லை தாண்டிய கட்டணச் சேவையை வழங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

எனவே இதன்முலம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்கள் தங்களது கைபேசி செயலிகள் மூலமாகவே கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து நேரடியாகப் பணம் செலுத்த முடியும்.

இந்த வசதியை முழுமையாகச் செயல்படுத்த விற்பனையிட இயந்திரங்கள் (POS terminals) மற்றும் வணிகர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளை ஒரே டிஜிட்டல் கட்டண வலைப்பின்னலில் இணைக்கும் ‘புராஜெக்ட் நெக்சஸ்’ (Project Nexus) திட்டத்திலும் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன என்று அவர் சொன்னார்.

முன்னர் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றிய குமரன், இந்தியாவின் ‘யுபிஐ’ (UPI) மற்றும் சிங்கப்பூரின் ‘பே-நவ்’ (PayNow) இணைப்பைச் செயல்படுத்த ஓராண்டு காலம் தேவைப்பட்டதை நினைவு கூர்ந்தார். அதேபோன்ற ஒரு வலுவான மற்றும் பாதுகாப்பான கட்டமைப்பை மலேசியாவிலும் உருவாக்க அதிகாரிகள் தீவிரமாக உழைத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது, மலேசியாவிற்கு வரும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவிற்குச் செல்லும் மலேசியர்களும் நாணய மாற்று நிலையங்களைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here