கோலாலம்பூர்:
சீனப் புத்தாண்டு மற்றும் ரமலான் போன்ற பண்டிகைக் காலங்கள் நெருங்கும் வேளையில், தங்களது அவசரத் தேவைகளுக்காகத் தங்கத்தை அடகு வைக்கச் செல்லும் மலேசியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் (ஒரு கிராம் சுமார் RM760 வரை) அதிகரித்தது. இதனால், மக்கள் தங்கள் பழைய அடகு நகைகளைத் தற்போதைய உயர்ந்த விலைக்கு ஏற்ப ‘மறு-நிதியுதவி’ (Refinancing) செய்ய முற்படுகின்றனர். இது அடகுக்கடைகளில் இருந்து அதிகப்படியான பணம் வெளியேறக் காரணமாகியுள்ளது.
சீனப் புத்தாண்டு மற்றும் ரமலான் மாதச் செலவுகளுக்காகப் பல குடும்பங்கள் ஒரே நேரத்தில் தங்களது நகைகளை அடகு வைத்துப் பணம் பெற முயல்வதால், கடைகளில் உள்ள ரொக்க இருப்பு வேகமாகத் தீர்ந்துவிட்டது.
குறைந்த வருமானம் மற்றும் உயர்ந்து வரும் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், நடுத்தரக் குடும்பங்கள் குறுகிய காலக் கடன்களுக்காக அடகுக்கடைகளை அதிகம் சார்ந்துள்ளனர்.
சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள அடகுக்கடைகளின் வாசல்களில் “ரொக்கம் இல்லை, தங்கம் ஏற்கப்படாது” போன்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
தனியார் அடகுக்கடைகள் மட்டுமின்றி, ‘போஸ் மலேசியா’ (Pos Malaysia) நடத்தும் அடகுச் சேவைகள் மற்றும் வங்கி சார்ந்த ‘அர்-ரஹ்னு’ (Ar-Rahnu) நிலையங்களிலும் இதே போன்ற பணப்புழக்கச் சிக்கல் நிலவுகிறது.
பொருளாதார நிபுணர் டாக்டர் அஹ்மத் ரஸ்மான் அப்துல் லத்தீப் கூறுகையில், குறைவான ஊதியம் மற்றும் கடன் வாங்கும் நிலை அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் என்றும், இது குடும்பங்களின் நிதி நெருக்கடியைக் காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாகத் தங்கத்தை அடகு வைத்துப் பிள்ளைகளின் கல்விச் செலவு அல்லது மருத்துவச் செலவுகளைச் சமாளித்தவர்கள், தற்போது அடகுக்கடைகள் கையை விரிப்பதால் பணத்திற்கு எங்கு செல்வது என்று திகைத்து நிற்கின்றனர்.























