4 முறை திருடிய நபருக்கு 11 ஆண்டுகள் சிறை; “ஹலால் வேலை தேடுங்கள்”- நீதிபதி கடும் எச்சரிக்கை!

பத்து பகாட்:

முதியவர்களைத் தாக்கி தங்கச் சங்கிலிகளைப் பறித்த முன்னாள் தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்குத் தண்டனை வழங்கிய நீதிபதி, குடும்பத்தைக் காப்பாற்ற நேர்மையான (ஹலால்) வழியில் உழைக்குமாறு அவருக்குக் அறிவுரை வழங்கினார்.

முகமட் அஸ்ருல் அசார் (32) என்ற குற்றம் சாட்டப்பட்டவர், ஏற்கனவே சிலாங்கூரில் ஆயுதம் ஏந்தி கொள்ளையடித்ததற்காக மூன்று முறை சிறைக்குச் சென்றவர். இது இவருக்கு நான்காவது முறை.

முதலாவது குற்றச்சாட்டில் பிப்ரவரி 3 அன்று காலை 10:20 மணிக்கு, ஜாலான் செத்தியா ஜெயாவில் உள்ள ஒரு பள்ளிக்கு முன்னால் 72 வயது மூதாட்டியின் தங்கச் சங்கிலியைப் பறித்தார்.

இரண்டாவதாக ஜனவரி 3 அன்று பாரிட் பெசார் பகுதியில், மின்சார மிதிவண்டியில் (E-bike) சென்ற 61 வயது பெண்ணின் சங்கிலியைப் பறித்தார். இதில் அந்தப் பெண் கீழே விழுந்து காயமடைந்தார்.

இரண்டாவது கொள்ளைச் சம்பவத்தின் போது, அஸ்ருல் தனது அலைபேசியைத் தவறுதலாகச் சம்பவ இடத்திலேயே விட்டுச் சென்றார். அதைக் கைப்பற்றிய பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் ஒப்படைத்தார். அந்த அலைபேசி கொடுத்த தடையத்தை வைத்துப் போலீசார் அவரைப் புக்கிட் பாசிர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் அஸ்ருல் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். தனது மனைவியின் அறுவை சிகிச்சைக்காகப் பணம் தேவைப்பட்டதாலேயே திருடியதாகக் கூறி கண்ணீர் விட்டார்.

இருப்பினும், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஒஸ்மான் அஃபெண்டி முகமட் ஷாலே கடுமையாகக் கூறியதாவது: “இது உனக்கு முதல் முறை அல்ல; நான்காவது முறை. உன் குடும்பத்தைக் காப்பாற்ற ஹலால் (நேர்மையான) வேலையைத் தேடு” என்றுசொன்னார் .

குற்றவியல் சட்டத்தின் 392-வது பிரிவின் கீழ் அவருக்கு 11 ஆண்டுகள் சிறை மற்றும் 3 பிரம்படிகள் விதிக்கப்பட்டன. அவர் கைது செய்யப்பட்ட பிப்ரவரி 3-ஆம் தேதியிலிருந்து இந்தத் தண்டனை தொடங்கும் என நீதிபதி உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here