அனுமதியின்றி வைத்திருந்த 820 LPG எரி வாயு சிலிண்டர்கள் பறிமுதல் – இருவர் கைது

( ரெ.மாலினி)

மலாக்கா –

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்வாதாரச் செலவுத் துறை (KPDN) மலாக்கா, தெலோக் மாஸ் பகுதியில் நேற்று இரவு மேற்கொண்ட இரு தனித்தனியான சோதனைகளில், அனுமதியின்றி சேமித்து, விநியோகம் செய்யப்பட்ட 820 திரவ பெட்ரோலிய வாயு (LPG) சிலிண்டர்களை பறிமுதல் செய்தது.

நேற்று இரவு சுமார் 9 மணியளவில் 15 அமலாக்க அதிகாரிகள் மூன்று வாரங்களாக மேற்கொண்ட உளவுத்தகவல் சேகரிப்பு மற்றும் பொதுமக்கள் புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என

மலாக்கா KPDN இயக்குநர் டாக்டர் முகம்ட் ஹஸிமின் ஜமாலுடின் தெரிவித்தார்.

முதல் இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு வர்த்தக முத்திரைகளைக் கொண்ட 524 LPG சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 191 சிலிண்டர்கள் வாயுவுடன் நிரப்பப்பட்ட நிலையில் உரிய லைசன்ஸ் இல்லாத இடத்தில் சேமிக்கப்பட்டிருந்தன. மேலும், ஒரு முதல் ஏழு டன் வரை சுமக்கும் திறன் கொண்ட ஐந்து லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை கட்டுப்பாட்டு பொருட்களை சட்டவிரோத இடங்களுக்கு மாற்ற பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

அந்த இடத்திற்கு பொறுப்பானதாக ஒப்புக்கொண்ட 50 வயதுக்கு உட்பட்ட உள்ளூர் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டார். முதல் இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 476,280 வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் 296 LPG சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் 160 சிலிண்டர்கள் வாயுவுடன் நிரப்பப்பட்டிருந்தன. மேலும், ஒரு டன் சுமக்கும் நான்கு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 107,514 வெள்ளி ஆகும்.

சட்டப்படி அனுமதி ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறிய 40 வயதுக்கு உட்பட்ட மற்றொரு உள்ளூர் ஆண் நபரும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார்.

இரு இடங்களிலும் மொத்தமாக 583,794. வெள்ளி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு, 1961 ஆம் ஆண்டு சப்ளை கட்டுப்பாட்டு சட்டம் பிரிவு 21 மற்றும் 1974 ஆம் ஆண்டு சப்ளை கட்டுப்பாட்டு விதிகள் பிரிவு 3(1) கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 1 மில்லியன் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

கட்டுப்பாட்டு பொருட்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி லாபம் ஈட்ட முயற்சிக்கும் எவரிடமும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் KPDN எச்சரிக்கை விடுத்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here