(ரெ.மாலினி)
மலாக்கா:
மலாக்கா தெங்கா பகுதியில் உள்ள லேபோ ஆயர் குரோ – படாங் ஜாம்பு சமிஞ்சை விளக்கு சந்திப்பில் கடந்த 10 பிப்ரவரி 2026 மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமானதாக குற்றம் சாட்டப்பட்ட ங் சுன் திவான் (35 வயது) மலாக்கா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தன் மீதான குற்றத்தை மறுத்தார்.
மஜிஸ்திரேட் ஒஸ்மான் அப்துல் கானி முன்னிலையில், சீன மொழியில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர் மறுத்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர்மீது சாலைப் போக்குவரத்து சட்டம் 1987 (திருத்தம் 1999) பிரிவு 41(1) கீழ் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவத்தில், 44 வயதான மொஹட் ஷாஹ்ரோல் அனுவார் மட் ரோபி உயிரிழந்தார். அவர் ஹோண்டா EX5 மோட்டார் சைக்கிளில் தனது மாற்றுத்திறனாளி குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காகச் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தலையும் உடலும் கடுமையாகக் காயமடைந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
போலீஸ் தொடக்க விசாரணையின் படி, புரோ டுவா மைவி கார் ஓட்டிய குற்றம் சாட்டப்பட்டவர் ‘மைக்ரோஸ்லீப்’ (சில விநாடிகள் தன்னியக்கமாக தூங்கிவிடும் நிலை) காரணமாக எதிர்புற பாதையில் நுழைந்து, சிக்னலில் நின்றிருந்த வாகனங்களை மோதியதாக நம்பப்படுகிறது. மொத்தம் ஆறு வாகனங்கள் — மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மூன்று கார்கள் — இந்த விபத்தில் சிக்கின.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, 20,000 முதல் 50,000 வெள்ளி வரை அபராதம் மற்றும் குறைந்தது 5 ஆண்டுகள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படலாம்.
நீதிமன்றம் 6,000 வெல்லி ஜாமீன் (ஒரு உத்தரவாத நபருடன்) வழங்கி, ஓட்டுநர் உரிமத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், மாதந்தோறும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் கையொப்பமிடவும் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை 2 ஏப்ரல் 2026 அன்று நடைபெற உள்ளது.
-END





















