ஜோகூரில் உள்ள 18 பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு

ஜோகூர் பாரு:

நேற்று முதல் ஜோகூர் மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள மொத்தம் 18 எரிப்பொருள் நிரப்பு நிலையங்கள் டீசல் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் பத்து பஹாட்டில் நான்கு எரிப்பொருள் நிரப்பு நிலையங்களும், ஜோகூர் பாருவில் நான்கு, கோத்தா திங்கியில் இரண்டு, சிகாமாட் ஒன்று என்பனவும் அடங்கும் என்று ஜோகூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் இயக்குநர் சஸ்லிண்டா போர்னோமோ கூறினார்.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிறுவனங்களின் கண்காணிப்பு மூலம் பற்றாக்குறை நிலவும் எரிப்பொருள் நிலையங்களில் மீள் நிரப்புவதற்கான செயல்முறை தீவிரமாக நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

“தேவை அதிகரித்ததன் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள ஒரு சில பெட்ரோல் நிலையங்களில் இத்தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், பொறுப்பான பெட்ரோல் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்ட இடங்களில் நேற்று மாலை தொடங்கி டீசலை மீள் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளன என்றும், பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் டீசல் விநியோகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

“இதுவரை, டீசல் எரிபொருள் பயன்படுத்துபவர்களிடமிருந்து விநியோகத்தைப் பெறுவதில் உள்ள சிரமங்கள் குறித்து ஜோகூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்திற்கு எந்த புகாரும் பெறவில்லை,” என்று அவர் இன்று இங்கு தொடர்பு கொண்டபோது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here