கோலாலம்பூர், பிப்ரவரி 18, 2026:
இன்று காலை 10 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக இருப்பதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (LLM) தெரிவித்துள்ளது. இருப்பினும், நண்பகலுக்குப் பிறகு வாகனங்களின் எண்ணிக்கை படிப்படியாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பில் மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இதுவரை முக்கிய இடங்களில் நெரிசல் ஏதும் பதிவாகவில்லை என்று குறிப்பிட்டார். குறிப்பாக, கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையில் உள்ள கெந்திங் செம்பா (Genting Sempah), டக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் (E1 & E2) உள்ள சிரம்பான், ஸ்லிம் ரிவர், தாப்பா மற்றும் கோபிங் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து கட்டுக்குள் உள்ளது.
இருப்பினும், நண்பகல் வேளையிலோ அல்லது ஸுகூர் தொழுகைக்குப் பின்னரோ வாகனங்களின் வருகை அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.
இந்நிலையில் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளதால், அது போக்குவரத்து சீரமைப்பை பாதிக்கக்கூடும். எனவே மழையில் பயணிக்கும்போது காரின் வைப்பர்கள் (Wipers) மற்றும் முகப்பு விளக்குகள் (Lights) நல்ல நிலையில் இருப்பதை வாகன ஓட்டுகள் உறுதி செய்துகொள்ளுமற்று அவர் மேலும் கூறினார்.
மழையில் வாகனம் ஓட்டும்போது Hazard Lights -ஐ தேவையின்றி ஒளிரவிட வேண்டாம்; இது பின்னால் வரும் ஓட்டுநர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி விபத்துக்கு வழிவகுக்கலாம்.
மேலும் குறிப்பிட்ட வேகக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதோடு, முன்னால் செல்லும் வாகனத்திற்கும் உங்கள் வாகனத்திற்கும் இடையே போதிய இடைவெளியைப் பேண வேண்டும் என்றும் அகார் சொன்னார்.
பயணிகள் தங்களின் பயணத்தை ‘MyPLUS-TTA’ செயலி மூலம் வழங்கப்படும் பயண நேர ஆலோசனையின் (TTA) படி திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுதவிர PLUSLine: 1-800-88-0000, LLM Hotline: 1-800-88-7752,
X (Twitter) கணக்குகள்: @plustrafik அல்லது @llmtrafik ஆகிய அகப்பங்களில் போக்குவரத்து நிலவரங்களை உடனுக்குடன் அறியமுடியும் என்றும் அவர் கூறினார்.





















