சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக சீமான் அறிவிப்பு

திருச்சி:

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், தான் போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி மாநாடு திருச்சியில் பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெறும் என்றும் அச்சமயம் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாநாட்டுத்திடலை புதன்கிழமை நேரில் பார்வையிட்ட அவர், நாம் தமிழர் கட்சித் தேர்தல் அறிக்கை வெளியிடாது என்றும் மாறாக தங்களுடைய ஆட்சி எவ்வாறு இருக்கும் என்பதற்கான செயல்முறை மட்டுமே வெளியிடப்படும் என்றும் கூறினார்.

இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் திருச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கையோடு, தங்களுடைய தேர்தல் பயணம் தொடங்கும் என்று சீமான் குறிப்பிட்டார்.

“நாங்கள் மக்களிடம் மட்டுமே கூட்டணி வைத்துள்ளோம். வேறு யாரிடமும் அல்ல,” என்றார் சீமான்.

“தமிழகத்தின் வளர்ச்சி என்பது கடன் வாங்குவதில் மட்டுமே உள்ளது. இலவசங்களை அறிவித்துவிட்டு அத்தியாவசியங்களுக்கான வரியை உயர்த்துகின்றனர்,” என்று குற்றஞ்சாட்டினார் சீமான்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு வாங்கியது போன்று வேறு எந்த இந்திய மாநிலமும் கடன் வாங்கியது இல்லை என்று குறிப்பிட்ட அவர், தொடர்ந்து கடன் வாங்கினால் ஒரு மாநிலம் பொருளியல் ரீதியாக அடிமையாகிவிடும் என்றார்.

சீமான் எந்தத் தொகுதியில் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு நாம் தமிழர் கட்சியினர் இடையே அதிகரித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here