ந.பச்சைபாலன்
ஒவ்வொரு முறையும் எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம்., மெட்ரிகுலேஷன் தேர்வு முடிவுகள் வெளிவரும்போது நம் மாணவர்களும் பெற்றோரும் எதிர்நோக்கும் மகிழ்ச்சியும் வேதனையும் கலந்த மனநிலையை யாராலும் புரிந்துகொள்ள முடியும். சிறந்த தேர்ச்சிக்காக மனம் மகிழ்ந்தாலும் மறுபுறம் அரசின் கல்வி உதவி நிதியும் அரசுப் பல்கலைக்கழகத்தில் விரும்பும் துறையில் பயில வாய்ப்பும் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் பலரைக் கவலையில் ஆழ்த்திவிடுவதை ஒவ்வோர் ஆண்டும் காண்கிறோம்.கடந்த சில ஆண்டுகளாக, மிகச் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தும் நம் மாணவர்கள் விரும்பிய துறையில் படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்ட தகவல்கள் நாளிதழ்களில் வருகின்றன. எல்லாப் பாடங்களிலும் ‘ஏ’ கிரேடு பெற்றிருந்தும் மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு மனுச்செய்தால் கணினி அறிவியல், வேதியற் பொறியியல், ரசாயன பொறியியல் என அவர்கள் விரும்பாத துறையில் படிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மருத்துவம், பொறியியல், கணக்கியல், பல் மருத்துவம் எனத் தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் படிக்க முடியாமல் மாணவர்கள் தவிக்கும்போது பெற்றோரின் வேதனை சொல்லி மாளாது. அரசாங்கக் கல்விக்கூடங்களில் ஏதாவது துறையில் படிக்க வாய்ப்புக் கிடைத்தால் போதும் என நினைக்கும் மாணவர்களுக்குச் சிக்கலில்லை. ஆனால், இன்ன துறையில்தான் படிக்க வேண்டும் என இலட்சியத்தோடு இருப்பவர்கள் நிலை?வேறுவழியின்றி குடும்பச் சொத்துகளை விற்றோ, கடன் உதவி பெற்றோ தனியார் கல்விக்கூடங்களுக்கு அவர்கள் போகின்றனர். பட்டப்படிப்புக்குப் பின் வாழ்நாள் முழுவதும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். கல்வி நல்ல வணிகமாக, லாபம் ஈட்டும் தொழிலாக மாறிவிட்ட நாட்டில், நம் இந்தியப் பட்டதாரிகளில் பெரும் எண்ணிக்கையினர் கடன்பட்ட நெஞ்சினராய் உள்ளனர். இந்த அவலத்தைக் களைய என்னதான் வழி?
நம் மாணவர்களின் உயர்கல்விக்குக் கடன் உதவி வழங்க நிறைய அமைப்புகள் உள்ளன. எம்.ஐ.இ.டி., நேசா, இராம சுப்பையா கல்வி நிதி, தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம், பி.டி.பி.டி.என். போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆயினும், நம் மாணவர்களுக்கு உதவும் வகையில் தேசிய நிலையில் ‘இந்திய மாணவர் கல்வி அறவாரியம்’ ஒன்றினை அமைப்பது நீண்ட காலத்திற்கு நிலையான தீர்வாக அமையும் என்பது திண்ணமாகும்.அண்மையில், ஸக்கிர் நைய்க் தொடுத்த அவதூறு வழக்கில் 1.5 மில்லியன் ரிங்கிட் நஷ்ட ஈடு செலுத்த வேண்டிய சூழலில் பினாங்கு மாநில மேனாள் துணை முதலமைச்சர் பேராசிரியர் ப. இராமசாமி இந்திய சமுதாயத்தின் உதவியை நாடினார். மிகக் குறுகிய காலக்கட்டத்தில் இந்திய சமூகத்தின் எல்லா நிலைகளைச் சார்ந்தவர்கள் அந்தப் பெருந்தொகையை வழங்கி, நம் சமூகத்தின் ஒற்றுமையையும் பலத்தையும் நிரூபித்தனர். இதையே முன் மாதியாகக் கொண்டு, இந்திய சமூகமே ஒருமித்த உணர்வோடு ஒன்றிணைந்தால் நம் மாணவர்களுக்குக் கல்வி நிதி தொடங்கி, ஆண்டுக்குப் பல மில்லியன் ரிங்கிட்டைத் திரட்ட முடியும். நாம் தொடங்கிவிட்டால் ஆண்டுதோறும் இதற்கு அரசாங்கத்தின் நிதி உதவியும் கிடைக்க வாய்ப்புண்டு.
இதன்வழி ஆண்டுக்குப் பல நூறு மாணவர்களை நம் இந்திய சமூகமே உயர்கல்விக் கூடங்களுக்கு அனுப்பிப் படிக்க வைக்க முடியும். சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தும் அரசாங்கக் கல்விக்கூடங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் தனியார் உயர்கல்விக் கூடங்களில் கல்வியைத் தொடர இந்த அறவாரியம் பெருந்துணையாக இருக்கும். குறிப்பாக, தமிழ்ப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இம்மாதிரியான கல்வி உதவி நிதி கிடைக்கும் சூழல் உருவானால் தமிழ்ப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை உயர வழி பிறக்கும்.அண்மையில், இதுபோன்ற அறவாரியம் அமைக்கும் திட்டத்தை முன்வைத்து, கல்வியாளர் முனைவர் குமரன் வேலு தம் கருத்துகளை மக்கள் ஓசை நாளேட்டில் பகிர்ந்து கொண்டார். அவரின் அரிய ஆலோசனைக்கு எந்தவித எதிர்வினையும் இல்லாதது ஏமாற்றம் அளித்தது. நம் இந்திய மாணவர்களுக்குக் கல்வி அறவாரியம் அமைப்பதன் மூலம் ‘ஐந்தாண்டுகளில் 50 மருத்துவர்கள், 50 பொறியியலாளர்கள், 50 கணக்காயர் என150 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உருவாக 75 மில்லியன் ரிங்கிட் தேவை என்றால் ஆண்டுக்கு 15 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை. இந்த நிதியை வட்டியில்லாக் கடனாகவும் வழங்கலாம்’ என நம்பிக்கையூட்டும் வகையில் முனைவர் குமரன் வேலு கூறுகிறார்.
சிங்கப்பூரில் வாழும் இந்திய சமூகத்திற்காக 1992இல் ‘சிண்டா நிதி’ (SINDA FUND) அரசால் தொடங்கப்பட்டது. சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், உதவி தேவைப்படும் குடும்பங்கள், மூத்த குடியினர் ஆகியோரின் பல்வேறு நல்வாழ்வுக்கான திட்டங்களை முன்னெடுக்க இந்நிதி பயன்படுகிறது. சிங்கப்பூர் இந்தியர்கள் மாதந்தோறும் தாங்கள் ஈட்டும் வருவாயிலிருந்து ஒரு டாலர் முதல் முப்பது டாலர் (வருமானத்திற்கு ஏற்ப) செலுத்துகின்றனர். மாணவர்களின் டியூஷன் வகுப்பு முதல், குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு நிதி உதவி, இஞைர்களுக்குத் தன்முனைப்புத் திட்டங்கள் என இந்திய சமூகத்தைக் கைதூக்கி விடும் பயன்மிகு நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற ஒரு நிதித் திட்டத்தை நம் நாட்டிலும் தொடங்க ஏன் இதுவரை முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை? நமக்காக ‘மிண்டா நிதி’யை (MINDA FUND) முப்பது ஆண்டுகளுக்கு முன் நம் அரசும் தொடங்கியிருந்தால் எத்தனை இளைஞர்கள், குடும்பங்கள், முதியோர்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்க முடியும் என்று எண்ணிப் பாருங்கள்! இனியாவது அரசிடம் நம் எதிர்பார்ப்பைச் சொல்லி அதற்கான தீர்வை ஏற்படுத்தலாமே! அல்லது தொடர்ந்து வாளாவிருந்து காலம் கடந்து போவதை வேடிக்கை பார்க்கப் போகிறோமா?
மலேசிய இந்தியர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் சேர்ந்து பிரிந்து நின்றாலும், ஒட்டுமொத்த சமூகத்தின் நன்மையைக் கருத்திற்கொண்டு, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒருமித்த உணர்வோடு ‘இந்திய மாணவர் கல்வி அறவாரியம்’ அமைப்பதில் முனைப்புக் காட்ட வேண்டும். இன்றைய நாட்டின் அரசியல் சூழலில் இந்தியருக்கான குரலை மெல்ல மெல்ல இழந்து வருகிறோம். நமக்கான கோரிக்கைகளை, தேவைகளை, எதிர்பார்ப்புகளை யாராவது அரசின் காதுக்குக் கொண்டு போவார்களா எனக் காத்திருக்கிறோம்.‘இந்தியர்களுக்கு உதவுவதற்கு விரிவான ஆய்வுகளை முடித்து விட்டோம், இந்தியர்களின் தேவைகளை அடையாளம் கண்டு விட்டோம், இந்தியர்களிடையே வறுமை ஒழிப்புத் தக்க பயன்களைத் தந்து வருகிறது’ இப்படி இந்தியர்களைச் சமாதானம் செய்யும் இனிப்பு மொழிகளைத் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.
இந்தச் சூழலில் நம் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு நாம் ஒன்றிணைந்து செயல்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இத்தகைய அறவாரியத்தை இப்போது அமைக்காமல் போனால் இன்னும் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ‘எப்போதோ நிதித் திட்டத்தைத் தொடங்கியிருந்தால்..’ என வெறும் வாயை மெல்லும் நிலையைத்தான் எதிர்நோக்குவோம்.பேராசிரியர் இராமசாமிக்கு அள்ளித் தந்ததுபோல், நம் மாணவர்களின் கல்விக்காக நிதி வழங்க இந்திய சமுதாயம் காத்திருக்கிறது. இந்திய சமுதாயத்தில் நலனில் அக்கறைகொண்ட செயல்திறமிக்க குழு அமைந்து, நிதி முறையாக நிர்வகிக்கப்பட்டால், இந்திய மாணவர் கல்வி அறவாரியம் நம் மாணவர்களின் கல்வித் துயர் துடைக்கும் வெற்றிபெற்ற அமைப்பாக இந்நாட்டில் புது வரலாறு படைக்கும். எப்பொதும் கையேந்தும் இனமாக இருக்கும் நாம், நமக்கு நாமே உதவிக்கொண்டு கல்வித்துறையில் சாதனைகளை ஏற்படுத்தலாம். இந்திய மாணவர் கல்வி அறவாரியத்தை எப்போது தொடங்கப் போகிறோம்?





















