புத்ராஜெயா, பிப்ரவரி 19, 2026:
மலேசியாவில் மதச் செயல்பாடுகளுக்கு அரசாங்கம் எந்தத் தடையையும் விதிக்கவில்லை என்பதைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், இத்தகைய நடவடிக்கைகள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டும், வெளிப்படையான முறையிலும் நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அனைத்து தரப்பினரும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று கூறிய அவர், இதற்கான தீர்வுகள் எப்போதும் எளிமையாக இருக்காது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
“நானும் கடந்த காலத்தில் மதப் பிரச்சார (Dakwah) நடவடிக்கைகளில் ஈடுபட்டவன் தான். ஆனால், மக்கள் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பிரச்சாரம் செய்ய விரும்பினால்… தயவுசெய்து கவனியுங்கள், பிரச்சாரத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை, ஆனால் விதிமுறைகளைப் பின்பற்றுங்கள். அதைத்தான் நாங்கள் கேட்கிறோம்,” என்று இன்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் ‘இஹ்யா ரமலான்’ (Ihya Ramadan) நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் பேசினார்.
இந்த நிகழ்வில் உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் மற்றும் அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் ஆகியோரும் உடனிருந்தனர்.
முன்னதாக கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங் சாலையில், யாயாசான் சிலாங்கூர் கட்டடத்திற்கு முன்னால் முறையான அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த ‘தக்வா’ (Dakwah) கூடாரத்தை கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) அதிகாரிகள் சமீபத்தில் அகற்றினர். இது தொடர்பாக ‘Multiracial Reverted Muslims’ (MRM) என்ற அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்திக்க உள்ளதாக DBKL நேற்று தெரிவித்திருந்தது.
பாதசாரிகள் நடக்கும் பாதையில் கூடாரம் அமைத்தது சட்டப்படி குற்றம் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தடையற்ற நடமாட்டத்தை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் DBKL விளக்கம் அளித்தது.
இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு MRM அமைப்பின் நிறுவனர் பிர்தௌஸ் வோங் வாய் ஹுங் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 14 ஆண்டுகளாக அதே இடத்தில் போலீஸ் மற்றும் DBKL அதிகாரிகளின் அறிதலோடு தங்களது அமைப்பு இந்தச் சேவையைச் செய்து வருவதாகவும், விற்பனை எதுவும் செய்யாததால் எவ்வித உரிமமும் தேவையில்லை என்று தங்களுக்கு முன்பு கூறப்பட்டதாகவும் அவர் வாதிட்டார்.
PAS இளைஞர் பிரிவும் DBKL-இன் இந்த நடவடிக்கைக்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.


















