சந்தேக நபரை கைது செய்யத் தவறிய விவகாரம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது மீண்டும் குற்றச்சாட்டு!

கோலாலம்பூர், பிப்ரவரி 20, 2026:

ஆயுதச் சட்டத்தின் கீழ் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்யத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஏற்கனவே விடுவிக்கப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது இன்று மீண்டும் அதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

46 வயதான அஸ்லான் சுடின் (Azlan Sudin), இன்று மெஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மஜிஸ்திரேட் நூரெலினா ஹானிம் அப்துல் ஹலீம் முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர் மறுத்து, விசாரணை கோரினார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி, மாலை 6.50 முதல் 7.00 மணிக்குள் புக்கிட் ஜலீல் போலீஸ் நிலைய வரவேற்பு பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

ஒரு பொது ஊழியராக, சட்டப்படி ஒருவரைக் கைது செய்ய வேண்டிய கடமையில் இருந்தும், 1960-ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் பிரிவு 8(a)-ன் கீழ் குற்றம் இழைத்த 36 வயது நபர் ஒருவரைத் திட்டமிட்டே கைது செய்யத் தவறியதாக அஸ்லான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்டப் பிரிவு: இந்தக்குற்றம் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 221(c)-ன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் இமான் நுர்ஹிதாயா இஸானி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு RM8,000 பிணைத் தொகையை முன்மொழிந்தார். இருப்பினும், அஸ்லானின் வழக்கறிஞர் அனசுஹா அதிகா மாட் சைடி பின்வரும் வாதங்களை முன்வைத்தார்:

நேற்று நடைபெறவிருந்த விசாரணையின் போது, சாட்சிகள் யாரும் ஆஜராகாததால் அஸ்லான் விடுவிக்கப்பட்டிருந்தார். ஆனால், இன்று மீண்டும் அவர் மீது அதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அஸ்லான் கடந்த 25 ஆண்டுகளாகப் போலீஸ் துறையில் பணியாற்றியவர். கடந்த ஆண்டு ஜூலை முதல் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஒரு மனைவியும் பள்ளியில் பயிலும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

அனைத்து வாதங்களையும் கேட்ட மஜிஸ்திரேட் நூரெலினா ஹானிம், ஒரு நபர் ஜாமீனுடன் RM3,000 பிணைத் தொகையில் அஸ்லான் விடுவிக்கப்பட அனுமதித்தார். மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காகவும், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணைக்காகவும் ஏப்ரல் 10-ஆம் தேதியை நீதிமன்றம் அடுத்த தவணையாக நிர்ணயித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here