கோலாலம்பூர், பிப்ரவரி 20, 2026:
பந்திங், கம்பங் ஸ்ரீ சீடிங்கில் உள்ள ஜாலான் நூரி பகுதியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் வீடுகளை இழந்த இரண்டு குடும்பங்களின் அவலநிலை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் செல்வதற்கு முன்பாக, பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களையும் பிரதமர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு நிதியுதவிகளையும் வழங்கினார்.
“இந்தச் சம்பவம் உண்மையிலேயே நெஞ்சைப் பிழிவதாக உள்ளது. குறிப்பாக, ஒரு குடும்பம் தீயில் சிக்கித் தவித்த தங்களின் மூன்று வயது மகனைப் பறிகொடுத்துள்ளது மிகவும் வருத்தத்திற்குரியது. இந்தச் சிறிய பங்களிப்பு அவர்களின் சுமையைக் குறைக்க உதவும் என்று நம்புகிறேன். இந்த கனத்த சோதனையை எதிர்கொள்ள அவர்களுக்கு மனவலிமையையும் மனஉறுதியையும் இறைவன் வழங்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.” என்று, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி அதிகாலை வேளையில் இந்தத் தீ விபத்து நிகழ்ந்தது. இதில் மூன்று வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. துரதிர்ஷ்டவசமாக, வீட்டின் உள்ளே சிக்கிக்கொண்ட மூன்று வயது சிறுவன் ஒருவன் தீயில் கருகி உயிரிழந்தான்.
மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள இந்தக் குடும்பங்களுக்குப் பிரதமரின் இந்த நேரடி வருகையும் உதவியும் பெரும் ஆறுதலை வழங்கியுள்ளது.




















