தாய்லாந்து எல்லையில் அதிரடி: மலேசியாவிற்கு கடத்த முயன்ற RM9 கோடி மதிப்புள்ள ‘ஐஸ்’ மெத் பறிமுதல்!

கோத்தா பாரு | பிப்ரவரி 26, 2026

தாய்லாந்து – மலேசிய எல்லையில் ஒரு பெரும் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முயற்சியைத் தாய்லாந்து அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

சுமார் 400 கிலோ கிராம் எடையுள்ள ‘கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன்’ (Crystal Methamphetamine) எனும் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதன் சந்தை மதிப்பு 9 மில்லியன் ரிங்கிட் (சுமார் 72 மில்லியன் பாட்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் நான்காவது ராணுவ மண்டல தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நாரதிப் போயனோக் (Naratip Phoyanok) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி: இந்த அதிரடி வேட்டை கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கியது. இதில் யாலா (Yala) மாகாணத்தின் தாசே பகுதியில் 16 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களைப் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர்.

போதைப்பொருளைக் கைப்பற்றிய அதிகாரிகள், தாங்கள் ஒரு ‘கூரியர்’ நிறுவன ஊழியர்கள் போல வேடமணிந்து, கடத்தல் கும்பலின் அறிவுறுத்தலின்படி அவற்றை சுங்கை கோலோக் (Sungai Golok) பகுதிக்குக் கொண்டு சென்றனர்.

சரக்குகளைப் பெற்றுக்கொள்ள வந்த மூன்று தாய்லாந்து ஆண்கள் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டனர்.

இவர்களிடமிருந்து 400 கிலோ மெத்தாம்பேட்டமைன் (ஐஸ்), ஒரு 9mm அரை-தானியங்கி கைத்துப்பாக்கி, 24 ரவுண்டு தோட்டாக்கள் மற்றும் இரண்டு மேகசின்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், இந்த போதைப்பொருட்கள் அண்டை நாடு ஒன்றிலிருந்து வடக்கு தாய்லாந்து வழியாகக் கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது. இவை தெற்கு தாய்லாந்தில் தற்காலிகமாகச் சேமிக்கப்பட்டு, பின்னர் மலேசியாவிற்குள் கடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த கும்பலின் பின்னணியில் உள்ள மூளையாகச் செயல்படுபவர்களைக் கண்டறிய தாய்லாந்து மற்றும் மலேசிய அதிகாரிகள் ஒருங்கிணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here