கல்விக் கழகங்கள், மக்களுடன் ஒற்றுமையை மேம்படுத்திக் கொள்ள

சிலாங்கூர், பந்திங் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற இம்ரான் நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த டத்தோஸ்ரீ நோர்லிஸா (வலமிருந்து நான்காவது).
கிள்ளான், பிப்.26- தேசிய உயர்கல்வி நிதிக்கழகம் (PTPTN) 2026ஆம் ஆண்டு பிடிபிடிஎன் ரமலான் இமாரா திட்டத்தை (IMRAN) முன்னெடுப்பதன் வழி கல்விக்கழகங்கள், உள்ளூர் சமூக மக்களுடன் ஒற்றுமை, வாழ்வாதாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் உணர்வை மேம்படுத்திக் கொள்கிறது.
IMRAN திட்டம் என்பது 2021 முதல் செயல்படுத்தப்பட்டு வரும் PTPTN கல்வி கடனுதவிக் கழகத்தின் சமூகப் பொறுப்பாக (CSR) அமைந்திடும் ஓர் அடையாளத் திட்டமாகும். இந்தத் திட்டம் நட்பின் சகோதரத்துவத்தை வலுப்படுத்துவதையும் PTPTN, மாணவர்கள், கல்விக் கழகங்களுக்கு இடையே நல்லுறவை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தை ஒழுங்கமைப்பதன் மூலம், மாணவர்கள், ஆசிரியர்களிடையே ஒற்றுமையை, அக்கறையை, அன்பை தொடர்ந்து வளர்க்க முடியும்.
இந்தத் திட்டம் 2026 பிப்ரவரி 24 முதல் மார்ச் 13 வரை கடந்தாண்டைக் காட்டிலும் பெரிய அளவில் நடைபெறும். PTPTN மலேசியா முழுவதும் ஏழு இடங்களை உள்ளடக்கிய ஐந்து (5) மண்டலங்களில் இதை ஏற்பாடு செய்கிறது. அதாவது மத்திய மண்டலத்தில் பந்திங் பாலிடெக்னிக், சிட்டி பல்கலைக்கழகம், வடக்கு மண்டலத்தில் உங் ஜொமார் பாலிடெக்னிக், கிழக்கு மண்டலத்தில் கோத்தா பாரு பாலிடெக்னிக், தெற்கு மண்டலத்தில் இப்ராஹீம் சுல்தான் பாலிடெக்னிக். போர்னியோ மண்டலத்தில் கோத்தா கினாபாலு பாலிடெக்னிக், சரவாக் புத்ரா மலேசியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இந்த செயல்திட்டம் நடத்தப்படவுள்ளது.
இத்திட்டம் வாழ்வாதாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், PTPTN, உயர்கல்விக் கழகங்களுக்கு இடையிலான பிணைப்பையும் வலுப்படுத்துகிறது என்று PTPTN தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் தெரிவித்தார்.

மடானி கல்வி உதவித்தொகை அட்டையை பந்திங் பாலிடெக்னிக் இயக்குநர் இப்ராஹிம் புஹானிடம் வழங்குகிறார் டத்தோஸ்ரீ நோர்லிஸா. அருகில் உயர்கல்வி அமைச்சின் சமூகக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்வி இலாகாவின் மாணவர் சேர்க்கை, மேம்பாட்டுப் பிரிவின் இயக்குநர் ஹாஜி அஸிரின் பின் அப்துல் அஸிஸ்.
இந்தத் திட்டத்தின் மூலம் வறுமைச் சூழலில் உள்ள மூன்று மாணவர்களுக்கு மடானி கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. ஒரு முறை உதவியாக 500 ரிங்கிட் அம்மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
மேலும் இந்தப் புனித ரமலான் மாதத்தில் நோன்புற்றிருக்கும் 20 பணியாளர்களுக்கு PTPTN உதவிப் பொட்டலங்கள் வழங்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

பிடிபிடிஎன் உதவிப் பொட்டலத்தைப் பெற்றுக் கொண்டவர்களுடன் டத்தோஸ்ரீ நோர்லிஸா.
இந்த நிகழ்வில் PTPTN நிர்வாக வாரிய உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் ரசாக் ஜஃபார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.








