குவாந்தான் | பிப்ரவரி 27, 2026 –
பகாங் மாநிலத்தின் ரவூப் (Raub) மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்திற்குள் நடந்த இரண்டு தனித்தனி தீ விபத்துகளில் சிக்கி மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
இன்று இரவு சுமார் 7:30 மணியளவில், ரவூப், புக்கிட் கோமன் (Bukit Koman) பகுதியில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் பட்டறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கி 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அங்கிருந்து ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதை ரவுப் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்பிரிண்டெண்டென்ட் முகமட் ஷாரில் அப்துல் ரஹ்மான் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக, ரவூப், உலு டோங் (Ulu Dong) பகுதியில் உள்ள காம்போங் பாமா கூலாட் கிராமத்தில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலியானது குறிப்பிடத்தக்கது.













