கோலாலம்பூர்:
மலேசியாவின் முக்கிய நகரங்களில் பிச்சை எடுக்கும் முறை முற்றிலும் புதிய வடிவம் பெற்றுள்ளது.
குறிப்பாக கோலாலம்பூர் மற்றும் ஜோகூர் பாரு போன்ற பகுதிகளில், ‘நன்கொடை’ என்ற பெயரில் நவீன முறையில் பிச்சை எடுக்கும் கும்பல்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ‘நவீன’ பிச்சைக்காரர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருக்க, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமான கார்ட்டூன் மற்றும் சூப்பர் ஹீரோ வேடங்களை அணிகின்றனர்.
இந்தக் கும்பல் பெட்ரோல் நிலையங்கள், ரமலான் இரவுச் சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களை இவர்கள் தேர்வு செய்கின்றனர்.
வண்ணமயமான கார்டூன் வேடங்களைப் பார்த்து கவரப்படும் குழந்தைகள், அவர்களுடன் புகைப்படம் எடுக்க விரும்புகின்றனர். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அவர்கள், புகைப்படம் எடுத்த பிறகு கட்டாயமாக ‘நன்கொடை’ கேட்கின்றனர்.
டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப, இவர்களிடம் ரொக்கப்பணம் மட்டுமின்றி ‘கியூஆர் கோட்’ (QR Code) மூலமும் பணம் செலுத்தும் வசதி உள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்தும் உயர்தர உடைகளின் விலை சுமார் 1,000 ரிங்கிட்
வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 9 வயது சிறுவர்கள் முதல் 60 வயது முதியவர்கள் வரை இதில் ஈடுபடுகின்றனர்.
மூன்று மணி நேர உழைப்பில் சுமார் 100 ரிங்கிட் வரை வருமானம் கிடைக்கிறது,” என இந்தச் செயலில் ஈடுபட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளின் நடவடிக்கை
இந்த விவகாரம் குறித்து ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் மரினா இப்ராகிம் கூறுகையில், இது போன்ற செயல்களைத் தடுக்க ஜோகூர் சமூக நலத் துறைக்கு (JKM) முறையான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், பொதுமக்கள் இத்தகைய பிச்சைக்காரர்களை ஊக்குவிக்க வேண்டாம் என்றும், அவர்களுக்கு நன்கொடைகள் வழங்குவதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதாலும், குழந்தைகளை இதில் ஈடுபடுத்துவதாலும் அதிகாரிகள் சட்டரீதியான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்























